சென்னை: வங்கக் கடலில் கிழக்கு மற்றும் மத்திய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்வதால், தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
மேலும் சென்னை, திருப்பத்தூர், காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. கடலூர், தர்மபுரி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. நாளை முதல் 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.