சென்னை: மேற்கு திசையின் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்கள் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை நேற்று மிக தீவிரமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி, வால்பாறை, அவலாஞ்சி பகுதிகளில் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்ட நிலையில் அங்கு 100 மி.மீ மழை பெய்துள்ளது. இது இன்று மேலும் வலுவடைந்து 200 மி.மீ அளவுக்கு பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி தற்போது குஜராத் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. ஒடிசா கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி ஒடிசாவின் தரைப்பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது மேலும் தீவிரம் அடையும். அதன் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்னும் வலுவான மழைப் பொழிவு அங்கு தொடங்கவில்லை. இருப்பினும் ரெட் அலர்ட்டின் முன்னோட்டமாக அங்கு 100 மி.மீ அளவுக்கு நேற்று மழை பெய்துள்ளது. கூடலூர், அவலாஞ்சி வால்பாறை பகுதிகளில் 100 மி.மீ அளவுக்கு பெய்துள்ளது.
கன்னியாகுமரியில் 80மி.மீ ,தேனி மாவட்டத்தில் 50மி.மீ, பெய்துள்ள நிலையில், இந்த மழை இன்று முதல் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று கூடுதலாக இருந்தது. தஞ்சாவூர், தொண்டி, கடலூர், மதுரை பகுதிகளில் அதிகபட்சமாக 100 டிகிரி வெயில் நிலவியது. வேலூர், பரங்கிப்பேட்டை, சென்னை, திருச்சி, திருத்தணி பகுதிகளில் 99 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 17ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 18 மற்றும் 19ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதற்கிடையே, 20ம் தேதி வங்கக் கடலில் புதியதாக ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.