டெல்லி : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மே 27ல் வடமேற்கு, அதை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று காலை 5.30 மணிக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
தற்போது மேற்கு வங்காளத்தின் வடமேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய வங்ககடல் கடற்கரையில் இருந்து சாகர் தீவுக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ, திகாவிற்கு தென்கிழக்கே 130 கிமீ, பாரதீப்பிற்கு கிழக்கு – வடகிழக்கே 190 கிமீ மற்றும் கெபுபரா (வங்காளதேசம்) க்கு மேற்கு-தென்மேற்கே 210 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும். இன்று (மே 29) மேற்கு வங்கம் – வங்கதேச கடற்கரைக்கு இடையே சாகர் தீவுக்கும் கேபுபாரா (வங்காளதேசம்)க்கும் இடையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (மே 29, 30) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மேலும் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.