போல்பூர்: மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கம்,கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்,மேற்கு வங்கம், போல்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளியை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் நர்சு இருந்தார். அப்போது கடுமையான காய்ச்சலுடன் வந்த நோயாளிக்கு நர்ஸ் டிரிப் ஏற்றியுள்ளார்.
அப்போது அந்த நபர் நர்சிடம் ஏதேதோ பேசினார். அதை கண்டுகொள்ளாத நர்ஸ் தொடர்ந்து தனது பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த நோயாளி நர்சுக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரியிடம் நர்ஸ் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த நோயாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.