கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்த 31 வயது பெண் டாக்டர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். கல்லூரி கருத்தரங்கு அறையில் அவரது சடலம் கிடந்தது.
இதில், போலீசாருக்கு உதவுவதற்காக பணியமர்த்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் இந்த விவகாரத்தில் பல்வேறு ரகசியங்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், பெண் டாக்டர்கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்தும் மேற்கு வங்கம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி பெண் டாக்டரின் பெற்றோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ‘‘இந்த வழக்கு விசாரணையில் ஏதோ ஒன்று விடுபட்டுள்ளது. ஆரம்பத்திலேயே ஏன் கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘கொலை செய்யப்பட்டதாக உடனடியாக புகார் எதுவும் வராததால் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர்’’ என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘‘இறந்த டாக்டரின் சடலம் சாலையோரத்தில் கிடக்கவில்லை. கல்லூரி வளாகத்தில் இருந்திருக்கிறது. கல்லூரி முதல்வர் புகார் அளித்திருக்கலாமே? மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதா?’’ என கேட்டார். அதற்கு அரசு தரப்பில் இல்லை என பதிலளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, ‘‘மாணவி மரணத்தை தொடர்ந்து கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் அவர் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது எப்படி?’’ என கேட்டதோடு அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டதோடு, முதல்வர் கோஷ் நீண்ட விடுப்பில் செல்ல உத்தரவிடுமாறும் மாநில அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த வழக்கு மீண்டும் மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை.
எனவே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். நாளை (இன்று) காலை 10 மணிக்குள் விசாரணை அறிக்கையை மாநில போலீசார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்றார். இந்த வழக்கை கொல்கத்தா போலீசார் வரும் 18ம் தேதிக்குள் முடித்துக் காட்டுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
ஆனால் அதற்கு 5 நாள் முன்பாகவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை பொறுப்பை வகிக்கும் மம்தா பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கு வங்க அரசுக்கும் மாநில காவல் துறை டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
* 25 டாக்டர்களை விசாரிக்க முடிவு
இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீசார் ஜூனியர் டாக்டர்கள், இரவுப் பணி டாக்டர்கள், பிற ஊழியர்கள் என 25 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று பெண் டாக்டர் தன்னுடன் பணியாற்றும் 4 ஆண் டாக்டர்களுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளார். அவர்களும், அன்றைய இரவுப் பணியில் இருந்த ஜூனியர் டாக்டர்கள், ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்தி வரும் டாக்டர்கள் கொல்கத்தா போலீசார் இன்றைக்குள் (புதன் கிழமை) விசாரணையை முடிக்க வேண்டுமென கெடு விதித்திருந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.