கொல்கத்தா: மேற்கு வங்க மாணவி கொலை வழக்கு காவல்துறையால் தீர்க்கப்படாவிட்டால் சிபிஐக்கு மாற்றப்படும்என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு பயிலும் பெண் மருத்துவர் கடந்த 8ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதிகேட்டு மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ராம் மனோகர் லோகியா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியம் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் முழக்கமிட்டனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மருத்துவக்கல்லூரியில் முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொடூர சம்பவத்தில் தனது பெயரில் பொய்யான தகவல்கள் பரப்படுவது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். பெண் மருத்துவர் மரண விவகாரத்தில் அன்றிரவு பணியில் இருந்த 3 மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளருக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மருத்துவர்களின் போராட்டத்தை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐஇடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார். மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் பெற்றோரை சந்தித்து முதல்வர் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்தார். வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவமனையின் முதல்வர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. என்றும் தெரிவித்தார்.