ராமநாதபுரம்: முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவிற்காக 13.5 கிலோ தங்கக்கவசம் கடந்த அக். 25ம் தேதி மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. குருபூஜை விழா கடந்த 30ம் தேதி முடிந்த நிலையில் ஒரு நாள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. நேற்று காலையில் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் குடும்பத்தினர் சார்பாக பொங்கல் வைத்து, தேவர் சிலைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் தங்கக்கவசம் களையப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் இரட்டை வேடம் போடுகிறார். தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையும் கிள்ளி விடுவது போல ஓபிஎஸ் கூறுகிறார். அவர் போடும் இந்த நாடகம் ஒருபோதும், அதிமுகவிடம் எடுபடாது. ’’ என்றார். அதிமுகவினர் மிஸ்சிங்: அக். 30ம் தேதி பசும்பொன் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் கோஷமிட்டனர். எனவே நேற்று தங்கக்கவசம் களையும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது, உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.