பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று, மகளிர் பிரிவில், உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, எலினா ஸ்விடோலினா, ஈவா லிஸ் அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று கோலாகலமாக துவங்கின. மகளிர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில், அமெரிக்க வீராங்கனை பேடன் ஸ்டியர்ன்ஸ், ஜெர்மன் வீராங்கனை ஈவா லிஸ் மோதினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈவா, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த உலகின் 14ம் நிலை வீராங்கனை எலினா மிகைலிவ்னா ஸ்விடோலினா, துருக்கி வீராங்கனை ஸெய்னெப் ஸோன்மெஸ் மோதினர். துவக்கம் முதல் துடிப்புடன் ஆடிய ஸ்விடோலினா, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு முதல் சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, ரஷ்யாவின் கமிலா ராகிமோவா மோதினர். அநாயாசமாக ஆடிய சபலென்கா, 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.