தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் பரிதாபமாக பலியாகினர். தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேரு காலனி ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). இவரது வீட்டில் 18 அடி ஆழ உறை கிணறு உள்ளது. இந்த கிணறு வெகு நாளாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத்தொடர்ந்து கணேசன் உறவினரான ஆறுமுகநேரியை சேர்ந்த மாரிமுத்துவுடன் (36) சேர்ந்து கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது கிணற்றில் வாளி ஒன்று தவறி விழுந்துள்ளது. அதை எடுக்க கணேசன் கயிறு கட்டி இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கி மயங்கி சாய்ந்தார். அவரை மீட்க கிணற்றில் இறங்கிய மாரிமுத்துவும் விஷவாயு தாக்கி மயங்கினார். வெகுநேரமாகியும் இருவரும் மேலே வராததால் உறவினர்கள் பவித்ரன், ேஜசுராஜ் ஆகியோரும் உள்ளே இறங்க தொடங்கினார். அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர் சிறப்பு முக கவசம் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றில் இறங்கி பவித்ரன் மற்றும் ஜேசுராஜை கயிறு கட்டி மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் மற்றும் மாரிமுத்து இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.