திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆர்.கன்னிமுத்துவின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக மாவட்ட கவுன்சிலர் ரமேஷ் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.கன்னிமுத்துவின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள சுப்பையா சுவாமிகள் மடத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், மறைந்த கன்னிமுத்துவின் மகனும், திமுக மாவட்ட கவுன்சிலருமான ஆர்.கே.ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இனிப்புடன் கூடிய உணவு மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினர். முன்னதாக, கன்னிமுத்துவின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், திமுக மாவட்ட பொருளாளர் மாமல்லபுரம் வெ.விஸ்வநாதன், திமுக நிர்வாகிகள் மோகன்குமார், ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.