கோவை: கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும், தாங்கள் தான் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறேன். அதன் பின்பு கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தேஜ கூட்டணி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என சொல்கிறார்கள். தமிழக கட்சியின் தலைமையில் ஆட்சி இருந்தால்தான் நல்லது. கூட்டணி ஆட்சி என்று வந்தால் அதை வரவேற்போம்.
அதிகாரம் ஒரே மையத்தில் இருக்காமல் பகிர்ந்து, மக்களுக்கு நல்லது நடக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அது நல்ல விஷயம். அது வரவேற்கதக்கது. நடிகர்கள் 2 பேர் மட்டும் போதைப்பொருள் பயன்படுத்தியது போலவும், மற்றவர்கள் பயன்படுத்தாதது போலவும் சொல்லக்கூடாது. ஆளுங்கட்சிக்கு எதிராக மற்ற கட்சிகள் இணைவது என்பது வியூகம். தவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் சொல்லும் வயது எனக்கு கிடையாது. அவருடைய முடிவை அவர் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.