புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு புதுச்சேரி தீயணைப்புத் துறையில் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சுந்தரி, விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களின் மகன் விஷால் (21).12ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்ததால், பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்தார். ஆனால் அவரைத் தன்னம்பிக்கை குறையாமல் வளர்க்கப் பெற்றோர் உடற்பயிற்சி தர எண்ணினர். இதையடுத்து மதகடிப்பட்டில் இருந்து தினமும் சுமார் 20 கிலோமீட்டருக்கு மேல் பேருந்தில் பயணம் செய்து நைனார்மண்டபம் என்ற இடத்தில் டை பிரேக்கர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர். இவர் உடற்பயிற்சி மேற்கொண்டதின் பயனாக ஜெர்மனியில் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் நான்கு வெள்ளிப்பதக்கம் வென்றதும், தற்போது தேசிய அளவிலான போட்டியில் தங்கமும், இரும்பு மனிதன் பட்டமும் வென்றுள்ளதும் அவரின் பெற்றோர் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாகவும் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றதை அறிந்த புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் விஷாலை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
விஷால் நைனார்மண்டபத்தில் டை பிரேக்கர் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சி மேற்கொண்டபோது வெயிட் லிஃப்டிங்கில் அவரது ஆர்வத்தைக் கண்டு காமன்வெல்த் போட்டி 2017ல் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் வென்ற பாக்கியராஜ் என்பவர் விஷாலுக்கு உத்வேகம் அளித்து பயிற்சியளிக்கத் தொடங்கினார். இதையடுத்து விஷால் உள்ளூரில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார். தொடர்ந்து 6 வருடங்கள் பயிற்சி மேற்கொண்டதன் விளைவாகப் பல போட்டிகளில் பதக்கங்களை வென்ற விஷால் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் மொத்தம் 196 நாடுகளில் இருந்து 7000 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்று வெயிட் லிஃப்டிங்கில் விஷால் முதன்முறையாக இந்தியாவுக்காக 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். இந்தியாவுக்காக இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களைப் பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டினார். அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். மேலும் ‘இரும்பு மனிதன்’ (specialstrong strongman of india) என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாகப் பயிற்சியாளர் பாக்கியராஜ் கூறுகையில்,‘‘மனவளர்ச்சி குறைபாடு இருந்தபோதும் தானாகப் பேருந்தில் பயணம் செய்து நைனார்மண்டபம் வரை வந்து தவறாமல் பயிற்சி எடுக்கத் தொடங்கினார் விஷால். அவருக்கு ஆரம்பத்தில் இயல்பாக இதர வீரர்களைப்போல் வெயிட் லிஃப்டிங்குக்காக எப்படி ஆடை மாற்றிப் பயிற்சி எடுப்பது என்பது முதல் அடிப்படைப் பயிற்சிகளை சொல்லித்தந்தோம். மாற்றுத்திறனாளி மாணவர் என்பதை மனதில் ஏற்றிக்கொள்ளாத வகையில் இயல்பான மற்ற வீரர்களைப் போலவே பயிற்சிகளை வழங்கினோம். மிகுந்த ஆர்வத்தோடு அவரும் நாங்கள் சொல்லிக் கொடுத்தபடி பயிற்சிகளை மேற்கொண்டார். அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்ட பயிற்சியின் பலனாக ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் நான்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றது பெருமைக்குரியதாகும். தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேசிய அளவிலான சிறப்புப் போட்டியில் தங்கமும், இரும்பு மனிதன் பட்டமும் வென்றுள்ளது மேலும் அவரின் திறமைமீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மாற்றுத்திறனாளி வீரர் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்ததை அறிந்த புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் அழைத்துப் பாராட்டினார். மேலும் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெயிட் லிஃப்டிங்கில் தங்கம் வென்றதால் வரும் நவம்பர் மாதம் 17ம் தேதி லித்துவேனியாவில் நடக்க உள்ள 31 நாடுகள் பங்கேற்கும் உலக சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது அதற்கான பயிற்சியை விஷால் தொடங்கியுள்ளார்” என்றார்.சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றது குறித்து விஷால் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதன்முறையாக தனிநபர் பிரிவில் அதிக பதக்கங்கள் வென்றுள்ளதாக பலரும் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்குக் காரணம் நான் உடற்பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்தபோது யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. தொடர்ந்து பயிற்சி இருந்தால்போதும் எந்தக் குறைகள் இருந்தாலும் நாம் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் என் பெற்றோர் ஏற்படுத்தினார்கள். அவர்கள் கொடுத்த தன்னம்பிக்கையான வார்த்தைகளும், எனது பயிற்சியாளர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையுமே எனது வெற்றிகளுக்கு காரணம். மேலும் நவம்பரில் நடைபெற உள்ள உலக அளவிலான போட்டியிலும் பதக்கங்களை வென்று வருவேன்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் விஷால்.புதுச்சேரி மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பல பதக்கங்களை வென்றுள்ள விஷால் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பவர் லிஃப்டிங் போட்டிகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்து கொள்ளும் முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னம்பிக்கை யோடு சாதனை படைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பயிற்சிகளை மேற்கொள்ளும் விஷால் லிதுவேனியாவில் நடைபெற உள்ள போட்டியிலும் பதக்கங்களை வென்று வர நாமும் வாழ்த்துவோம்.
தண்டபாணி