ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு வயது அதிகரிக்கும்போது எடை சற்றுக் குறைவது இயல்புதான். ஆனால், ஒருவருக்கு ஒரு மாதத்தில் இரண்டரை கிலோவுக்கு மேலே எடை குறைந்தால் அல்லது ஆறு மாதத்தில் நான்கரை கிலோவுக்கு மிகுதியாய் எடை குறைந்தால் அதைப்பற்றிச் சற்று சிந்திப்பது அவசியம். அதை உதாசீனப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பொதுவாக, ஆண்களைவிட பெண்களே எடை இழப்பினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பார்ப்போம்.
எடை இழப்புக்கு காரணம்
எந்த ஒரு நீண்டகாலத் தொற்று நோய்களும், எடை இழப்புக்கு வழிவகுக்கும். பொதுவாக பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவது சிறுநீர்த் தொற்றாகும். அவை சிறுநீரகங்களுக்குப் பரவி, சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுக்கும். பிற பொதுவான நோய்த்தொற்று என்பது காசநோயாகும். இது நம் நாட்டில் அதிகம் காணப்படுகிறது. இது எல்லா வயதினரையும் தாக்கும். பெண்கள் பெரும்பாலும் தங்களது உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்துக் கவலைப்படமாட்டார்கள். பெண்களின் எடை இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். அதனால் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்டு வர வேண்டும். அப்போதுதான் தங்களின் குடும்பத்தினரின் நலனையும் அவர்களால் கவனித்துக் கொள்ளமுடியும்.
தைராய்டு சுரப்பி தைராக்சின் நீரை மிகுதியாக சுரந்தால் தைரோடாக்சிகோஸிஸ் எனும் தொல்லை ஏற்படும். இது பெண்களை அதிகம் தாக்கும் முக்கியமான நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்திருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்போதும் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியது போலப் பெரிதாகக் காணப்படும். ஒருசிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கியிருக்கும். கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும் தைராய்டு ஸ்கேன் பரிசோதனை மூலமும் எளிதில் கண்டறிந்து தக்க சிகிச்சை பெற வேண்டும்.
நீரிழிவு நோயும் எடை இழப்புக்கு காரணமாகும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாடற்று நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அது எடை இழப்புக்கு வழிவகுக்கும். இந்த நீரிழிவு நோய் இரைப்பை நோய்க்கும் வழிவகுக்கும். அதனால் அங்கு குடல் இயக்கம் குறைய, பசியும் குறையும். இதுவே கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் உள்ளவர்களின் எடை இழப்புக்கு முக்கிய காரணமாகும்.
மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவையும் எடை இழப்புக்கு காரணமாகும். குடும்பப் பிரச்னைகளாலும், நிதிப் பிரச்னைகளாலும் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தில் இல்லாமல் தனித்து வாழும் பெண்களுக்கு மனச்சோர்வு வர வாய்ப்பு அதிகம். முதுமையில் தங்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்திருக்கும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. மேலும் முதுமையின் காரணமாகப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை ஏற்பட்டு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.
இதனால் பசி குறைய, உணவு குறைய, எடை குறைய வாய்ப்பு மிகுதியாகிறது. இது முதுமையின் விளைவு என்று எண்ணி, பல பெண்கள் மருத்துவரின் உதவியை நாடுவதில்லை.
எடை இழப்புக்குப் புற்றுநோய் ஒரு முக்கியக் காரணமாகும். புற்றுநோயால் பசியின்மை ஏற்படும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
உடலில் உள்ள ஊட்டச்சத்து இருப்புகளை விரைவாக உண்ணும் புற்றுநோய் கிருமிகளினால் விரைவாக எடையை இழக்கச் செய்யும். பெண்களிடம் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்கள் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களாகும்.
கருப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் தக்க சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம். எனவே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்க்கான பாப்ஸ்மியர் பரிசோதனை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனையை 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் ஆண்டுதோறும் செய்ய வேண்டும். கருப்பையில் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிய ஆண்டுதோறும் இடுப்புப் பகுதியை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.எடை இழப்புக்கு நோய் ஏதும் காரணம் இல்லையெனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்புரதச்சத்து அதிகமுள்ள உணவினைச் சேர்த்துக் கொள்ளலாம்.
உதாரணம், பால், முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி, சோயா, காளான், ஓட்ஸ், பருப்பு வகைகள் ஆகும். மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ள உணவுகள் எடையை அதிகரிக்க உதவும். உதாரணமாக அரிசி, கிழங்கு வகைகள், நெய், வெண்ணெய், இனிப்புகள் போன்றவை.கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு ஆகையால் இனிப்பு கலந்த எள் உருண்டைகளை தினமும் உண்ணலாம்.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
வைட்டமின் டி மாத்திரையைத் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். எடை இழப்பு என்பது ஒரு முக்கிய மருத்துவப் பிரச்னை ஆகும். இது ஒரு அடிப்படையாக உடல் அல்லது மன நோயைக் சார்ந்திருக்கக்கூடும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்தால் எடை இழப்பைச் சீர்செய்து நலமாக வாழலாம்.