ஏற்காடு: வார விடுமுறையை முன்னிட்டு, ஏற்காட்டில் இன்று சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமும், ஏழைகளின் ஊட்டியுமான ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏற்காட்டிற்கு வந்து சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். வழக்கமான நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி இன்று ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், கரடியூர் காட்சி முனை போன்ற இடங்களை கண்டு ரசித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காடு சூழல் பூங்காவிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், சாகச விளையாட்டில் ஈடுபட்டும், ஊஞ்சலில் ஆடியும் பொழுது போக்கி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், ரவுண்டான உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர கடைகளில் விற்பனை களை கட்டியது.