மதுரை: வார விடுமுறை, முகூர்த்தம் என்பதால் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களிலில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு செல்ல நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. தற்போது, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சித்திரை வீதிகளில் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மேலும் சித்திரை வீதி மற்றும் நகை கடை பகுதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூடியதால் திருவிழா கூட்டம் போல் வீதிகள் களை கட்டின.
அழகர்கோயிலில் அலைமோதிய கூட்டம்
மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர்கோயிலில் தொடர் விடுமுறையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதில் காலை முதலே பக்தர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் மலைக்கு மேல் உள்ள நூபுர கங்கையில் தீர்த்தமாடி ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.
வரும் வழியில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் சென்று வித்தக விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். மலைக்கு கீழே உள்ள சுந்தரராஜப் பெருமாள், தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண சாமி சன்னதியில் தரிசனம் செய்து பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் நேர்த்திகடனாக நெல், வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.