Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம் இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Porselvi

24.5.2025 – சனி பிரதோஷம்

பொதுவாக பிரதோஷமானது அது வரக்கூடிய கிழமைகளைப் பொறுத்து சிறப்பித்து சொல்லப்படுகிறது. திங்கட் கிழமையில் வந்தால் சோமவார பிரதோஷம், செவ்வாய்க்கிழமையில் வந்தால் அங்காரக பிரதோஷம், வியாழக் கிழமையில் வந்தால் குபேர பிரதோஷம் என்றும் வெள்ளிக்கிழமையில் வந்தால் சுக்ரவார பிரதோஷம் என்றும் சிறப்பித்து சொல்லப்படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷம் மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. சனி பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் அது ஆயிரம் பிரதோஷ நாட்களில் தொடர்ந்து சிவனை வழிபட்ட பலனைத் தரும் என்று சொல்லப் படுகிறது. சிவபெருமானையும் சிவனின் வாகனமாகிய நந்திதேவரையும் பிரதோஷ வேளையில் வழிபடுவது நமக்கு சிவலோக பதவியைப் பெற்று தரும். பிரதோஷத்தன்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபடுவதால் சகலவிதமான தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் நந்திதேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் துன்பங்கள் யாவும் முடிவுக்கு வரும். பிரதோஷ நேரத்தில் சக்தியோடும், முருகனோடும் சோமாஸ்கந்தராக அருளும் சிவபெரு மானை தரிசனம் செய்தால் குடும்ப உறவுகள் பலப்படும். இத்தினத்தில் நடராஜப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

25.5.2025 – ஞாயிறு
கழற்சிங்க நாயனார் குருபூஜை

‘‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

– என்று சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் பாடும் நாயன் மார்களின் கழற்சிங்க நாயனார் பல்லவர் மரபிலே தோன்றியவர். பெரு வீரர். சிவநெறியில் ஊன்றியவர். இவருடைய பிறந்த ஊர் திருக்கச்சி. கழற்சிங்கர் ஒரு நாள் சிவ தரிசனம் செய்வதற்காக பட்டத்தரசியுடன் வெவ்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரையைத் தொடங்கினார். ஒருநாள் திருவாரூரை அடைந்தார். சிவபெருமானை ஊனுருக வணங்கி தியானத் திலிருந்தார்.பட்டத்தரசி திருக்கோயில் மண்டபத்தை சுற்றி வரும் போது கீழே கிடந்த மலர் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அப்பொழுது செருத்துணையார் என்னும் சிவனடியார், ‘‘இறைவனுக்கு சாத்த வேண்டிய இந்த மலரை எப்படி முகர்ந்து பார்க்கலாம்?” என்று கோபம் கொண்டு அம்மலரை முகர்ந்த அப்பெண்ணின் மூக்கினைக் கத்தியால் வெட்டிய பிறகுதான் தெரிந்தது அந்த பெண் பட்டத்தரசி என்று. அரசி கீழே விழுந்து அழுதாள். அப்போது இறைவனை வணங்கிவிட்டு வெளியே வந்த கழற்சிங்கர் இது அரசியின் புலம்பல் ஆயிற்றே என்று அறிந்து, ‘‘யார் இந்தக் கொடும் செயலை செய்தது?”என்று விசாரித்தார். செருத்துணையார், ‘‘இறைவனுக்குரிய மலரை எடுத்து முகர்ந்ததால் இச்செயலை நான் செய்தேன்” என்றார். அப்பொழுது கழற்சிங்கர், ‘‘முதலில் எடுத்த கையை தண்டிக்க வேண்டும் என்று சொல்லி”அரசி என்றும் பாராமல் தண்டித்தார். அதீத சிவபக்தியில் நின்றவர்களில் ஒருவரான கழற்சிங்க நாயனார் குருபூஜை வைகாசி மாதம் பரணி. அதாவது இன்று.

26.5.2025 – திங்கள் சோம அமாவாசை

இன்று திங்கட்கிழமையில் வரும் சர்வ அமாவாசை என்பதால் சோம அமாவாசை என்று சிறப்பு. காலை 7:42 மணி வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை நட்சத்திரம். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை என்பது இன்றைய தினத்தின் சிறப்பு. திங்கட்கிழமையும் அமாவாசையும் சேர்ந்திருந்தால் அந்த அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்றும் சொல்வார்கள். இன்றைய தினம் முன்னோர் களை நினைத்து பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வது நல்லது. இது முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சுபத் தடைகளை நீக்கி சுபகாரியங்களை நிறைவேற்றித் தரும். இந்த நாளில் மிக முக்கியமாக அரசமர வழிபாடு செய்வது நல்லது. அரசமரத்தை அன்றைய தினம் சுற்றிவருவது சுபிட்சமான பலன்களைத் தரும். பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு சத் சந்தான விருத்தி ஏற்படும். திருமணத் தடைகள் அகலும்.அமாவாசையில் இல்லாதவர்களுக்கு உணவை தானமாக வழங்குவது மிக உயர்ந்த புண்ணியத்தைத் தரும். இதுதவிர கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றையும் தானமாகக் கொடுக்கலாம். இதனால் நாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் நம்மை தேடி வரும். நமக்கு அதிர்ஷ்டத்தை தரும்.சோமவாரத்தில் வரும் அமாவாசை நாளில் புதிய ஆடைகள் தானமாக கொடுக்கலாம். வசதி இல்லாதவர்களுக்கு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இதுபோன்ற உடைகளை தானமாக வழங்குவதால் அவர்கள் மன நிறைவடைவார்கள். இது நமக்கு மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும். அமாவாசை அன்று சுத்தமான நெய்யை வாங்கி யாருக்காவது தானமாக கொடுக்கலாம். நெய் என்பது தூய்மை மற்றும் தெய்வீகத்துவமானதாகும். நெய், புனித சடங்குகளுக்கு பயன்படுத்தக் கூடியதாகும். இதனால் கோவில்களுக்கு நெய் வாங்கி தானமாக கொடுப்பது மிக உயர்ந்த தானமாக கருதப்படுகிறது.

அமாவாசையோடு இன்று கிருத்திகை விரதம். சூரியனுக்கு உரிய கிருத்திகை நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில், கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதந்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது, ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடு பவர்களுக்கு முருகப்பெருமான். அருளால் நீண்ட ஆயுளும், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நிறைவான அறிவு, நிலையான செல்வம், நல்ல குணமுள்ள பிள்ளைகள் உட்பட பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
விபீஷணன் ராமபிரானின் நடையழகை தரிசிக்க விரும்பியதாகவும், அதை ராமபிரான் திருக்கண்ணபுரத்தில் சாதிப்பதாக ஐதீகம் உள்ளது. இந்த நிகழ்வு அமாவாசைதோறும் நடைபெறும்.சௌரிராஜப் பெருமாள் கருவறையிலிருந்து மெதுவாக நடந்து விபீஷணன் சந்நதிக்கு வந்து திரும்பி கருவறைக்கு செல்வது நடையழகு இன்று தரிசனமாக நடைபெறும்.

27.5.2025 – செவ்வாய்
புன்னாக கௌரி விரதம்

லோகமாதாவாகிய கௌரி தேவிக்கு உரிய விரதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் உண்டு. அதில் பிரசித்திப் பெற்றது கேதார கௌரி விரதம். ஆனால் அதைத் தவிர வெவ்வேறு பெயர்களில், அந்தந்த மாதங்களை பொறுத்து, கௌரி விரதங்கள் உண்டு. அதில் இன்றைய தினம் வருகின்ற கௌரி விரதம் புன்னாக கௌரி விரதம் என்று வழங்கப்படுகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த விரதத்தை இருப்பார்கள். இதன் பலனாக நிம்மதியான மண வாழ்க்கையும், குடும்ப அமைதியும், குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றமும், கணவருக்கு ஆயுள்பலமும், குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலமும் கிடைக்கும். இந்த புன்னாக கௌரி விரதத்தின் சிறப்புப் பலன், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் ஏற்படும். நோயுற்றவர்கள் சீக்கிரம் நலம் பெறுவார்கள். வீட்டில் முறையாக கலசம் வைத்து, பூஜை செய்யலாம். அல்லது அன்றைக்கு விரதமிருந்து, மாலை யில் அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வணங்கி வரலாம். இந்த
விரதத்தைப் பொறுத்தவரை புன்னை மரத்தடியில் மேடை அமைத்து, பூக்களால் அலங்கரித்து அம்பிகையின் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். அம்பிகைக்கு எல்லாவகையான உபசாரங்கள் செய்ய வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதில் எது முடியுமோ, அதனைச் செய்யலாம்.

28.5.2025 – புதன்
அக்னி நட்சத்திரம் முடிவு

இதுவரை சுட்டெரித்த கத்தரி என்னும் அக்னி நட்சத்திரம் இன்றோடு விடைபெறுகிறது அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று சொல்லி சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பண்டைய நாளைய வழக்கம். இக்காலத்தில் அக்னிதோஷ நிவர்த்தி வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. காலை சர்க்கரைப் பொங்கல் அல்லது கோதுமைப் பொங்கல் வைத்து, சூரிய நமஸ்காரம் செய்து அக்னிதோஷ நிவர்த்தியைச் செய்து கொள்ளலாம். இந்த அக்னிதோஷ காலத்திற்குப் பிறகு சுப காரியங்களை நல்ல நாள் பார்த்து தாராளமாகச் செய்யலாம்.காசி விஸ்வநாதர் ஆலயம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோவில் 16ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டி யனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோயில். இக்கோவிலில் சிவபெருமான் விஸ்வநாதராகவும் அம்பாள் பார்வதி விசாலாட்சியாகவும் வணங்கப்படுகிறார்கள். இக்கோயில் முழுநிலவு அன்று மட்டும் நாள் முழுதும் திறந்திருக்கும். இங்கு தினந்தோறும் நான்கு கால வழிபாடுகளும் வருடத்திற்கு மூன்று திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. தமிழ் மாதமாகிய வைகாசி மாதம் நடைபெறுகின்ற பிரம் மோத்சவத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதில் இன்று பூத வாஹனம்.

29.5.2025 – வியாழன் ரம்பா திருதியை, கதலி கௌரி விரதம்

இன்று ரம்பா திருதியை மற்றும் கதலி கௌரி விரதம். இந்த விரதத்தின் மூலமாக பெண்களுக்கு அழகும் வசீகரமும் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். கதலி மரம் என்பது வாழை மரத்தைக் குறிக்கும். வாழை மரத்தடியில் கௌரி விரதத்தை இருக்க வேண்டும், அல்லது வீட்டில் பலகையில் வாழை இலையை வைத்து, அதன்மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும். 108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர் அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும். நாளை சதுர்த்தி என்பதால் சதுர்த்தி விரதம் இருப்பவர் கள் பிள்ளையாருக்கு விரதம் இருக்க வேண்டும்.

30.5.2025 வெள்ளி
திருவல்லிக்கேணி வசந்த உற்சவம்

வசந்த உற்சவம் என்பது வசந்த காலத்தின் (சித்திரை – வைகாசி) வருகையைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆலயங்களில் நடைபெறும் நிகழ்வாகும். வசந்தோற்சவம் என்பது இரண்டு வார்த்தைகளின் தொகுப்பாகும். ‘‘வசந்த” (வசந்த காலம்) மற்றும் ‘‘உற்சவம்” (பண்டிகை). இந்த விழாக்கள் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும். சென்னை மாம்பலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில் இன்று முதல் மூன்று நாட்களும், ஆழ் வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட புகழ்பெற்ற திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று முதல் ஏழு நாட்களும் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.

30.5.2025 – வெள்ளி
நம்பியாண்டார் நம்பி குருபூஜை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பக்கத்திலுள்ள திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில், 33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு அவதரித்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருடைய அருஞ் செயலானது தேவாரங்களைத் தொகுத்துக் கொடுத்தது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் காட்டுமன்னார் கோயில் உள்ளது. அங்கு அவதரித்தவர் நாதமுனிகள். அவர் ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துக் கொடுத்தார். சைவ நூல்களை தொகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூல்களைத் தொகுத்துக் கொடுத்த நாதமுனிகளும் கிட்டத்தட்ட ஒரே ஊரில் அவதரித்தது என்பது அந்த ஊருக்கான சிறப்பு.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi