‘‘கைதுக்கு பயந்தே பேரணிக்கு வந்த தாமரை கட்சி பிரமுகர்கள் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘போலீஸ் அனுமதியை மீறி தைரியமாக பேரணிக்கு வந்த தாமரை கட்சியினர் கைது என்றதும் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார்களாம்.. புரம் என்று முடியும் மாவட்டத்தில் தாமரை கட்சியின் மாஜி எம்எல்ஏ தலைமையில் தேசிய கொடி பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தார்களாம்.. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அதனை மீறி கட்சி அலுவலகத்தில் இருந்து 77 பேர் பேரணிக்கு செல்ல தயாராகினார்களாம்.. அப்போது டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார், அனுமதியை மீறி பேரணி சென்றால் கைது செய்வோம்னு கூறியிருக்காங்க.. மாஜி எம்எல்ஏவோ, யாரும் கலைந்து செல்ல வேண்டாம், நாம் திட்டமிட்டபடி பேரணி நடத்தி கைதாவோம்னு கட்சியினரிடம் தெரிவித்தாராம்.. முன்னாள் மாஜி எம்எல்ஏ முன்னோக்கி நடந்து செல்ல, பின்னால் இருந்த சுவர் வழியாக கட்சியினர் ஒவ்வொருவராக ஏறி குதித்து ஓட்டம் பிடிச்சிட்டாங்களாம்.. மொத்தம் பேரணிக்கு 77 பேர் வந்த நிலையில் மிக சொற்ப எண்ணிக்கையிலான நபர்கள்தான் பெயளரவில் கைதானார்களாம்.. ஒரு கட்டத்தில் போலீசின் நடவடிக்கைக்கு பயந்து கட்சியினர் சுவர் ஏறி செல்வதை பார்த்த மாஜி எம்எல்ஏ, அவர்களிடம் கெஞ்சி, கூத்தாடியும் மதிக்காமல் கட்சியினர் ஓட்டம் பிடித்ததுதான் தற்போதைய ைஹலெட்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிந்தாமல் சிதறாமல் இலைக்கட்சியை கைப்பற்றுவதுதான் சின்ன மம்மியோட திட்டமாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மம்மியின் மறைவுக்கு பிறகு, நீங்கள் இல்லை என்றால் கட்சியை காப்பாற்ற யாரும் கிடையாது தாயேன்னு, ரெண்டாங்கட்ட தலைவர்கள் சின்னமம்மியின் வீட்டுக்கு சென்று கெஞ்சிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிகிட்டே இருக்கு.. இவ்வளவு செல்வாக்கோடு இருந்த தன்னை, காலில் விழுந்து கட்சியை அபேஸ் செய்த இலைக்கட்சி தலைவரை நினைத்து, சின்னமம்மி ரொம்பவே பொருமலா இருக்காங்களாம்.. ‘கட்சி என்னிடம் இருந்து எப்படி வெளியே போனதோ, அதேபோல ஒட்டுமொத்தமா என்னிடம் வர வைப்பேன்’ என்பதில் உறுதியா இருக்காங்களாம்.. நாலு ஆண்டு ஜெயிலுக்குள் இருந்து வெளியே வந்தால், நாமெல்லாம் இந்த அரசியலே வேண்டாம்னு ஓரமாக ஒதுங்கிவிடுவோம்.. ஆனால், இந்த வயதிலும் கட்சியை ஒருங்கிணைக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு பயணத்தை தொடருவது லேசுப்பட்ட காரியம் இல்லைனு இலைக்கட்சி நிர்வாகிகளே ஆச்சரியப்படுறாங்களாம்.. தேனிக்காரரை போலவோ, குக்கர்காரரை போலவோ, ஏதாவது ஒரு தனிக்கடையை தொடங்குவாங்கன்னு பார்த்தால், வெளியே போக மறுப்பதுடன், கட்சி என்னோடது என்பதில் உறுதியா இருக்காங்க.. இப்படி ஏதாவது ஒன்றை தொடங்கினால், மேலும் கட்சி சிதறுண்டு போகும். மீண்டும் ஒருங்கிணைக்க முடியவே முடியாது என்பதை உணர்ந்த சின்னமம்மி ஊர் சுத்துறாங்களாம்.. இலைக்கட்சியில அவரோட ஆசியுடன் மந்திரி, எம்எல்ஏ ஆனவங்கதான் அதிகம் இருக்காங்களாம்.. அவர்கள் சின்னமம்மியோட தொடர்பில் இருந்தாலும், இப்போது யாரும் தன்னுடன் வரவேண்டாம்.. இதற்காக சமயம் வரும்வரை காத்திருங்கன்னு சொல்லி வச்சிருக்காங்களாம்.. இலைக்கட்சி தலைவர் சொல்வது போல, சிந்தாமல் சிதறாமல் கட்சியை கைக்குள் கொண்டு வருவது தான் சின்னமம்மியோட சிந்தனையில் புதைந்து கிடக்காம்.. இதனால் தான் தன்னுடைய சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்வோருக்கு, சல்லிகாசு கூட கொடுக்காமல் இழுத்துக்கிட்டே போறாராம்.. சின்னமம்மியால் அரசியலில் இருந்தாலும், அவரால் போட்டியிட முடியாது. ஆனாலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்க ஆசைப்படுவதா சின்னமம்மியோட அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெல்டாவில் கட்சியில் களையெடுக்கும் சேலத்துக்காரரின் முடிவால் ‘கிலி’யில் இருக்கும் நிர்வாகிகள்பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டாவை சேர்ந்த இலை கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர், கட்சியில் மீண்டும் தேனிக்காரர், குக்கர் தலைமையானவர், சின்னமம்மி ஆகியோரை சேர்க்க வேண்டும்னு சேலத்துக்காரரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்களாம்… இதனால் அவர்கள் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்து வரும் சேலத்துக்காரர், நிர்வாகிகளின் நடவடிக்கைகள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்க அவரது டீமுக்கு ரகசியமாக உத்தரவிட்டுள்ளாராம்.. இந்த உத்தரவை தொடர்ந்து சேலத்துக்காரரின் டீம், நிர்வாகிகளை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டாங்களாம்.. டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளில் சில பேர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களிடம் தொடர்பில் இருந்து வருவது தெரிய வந்திருக்கு.. இந்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்… டெல்டாவில் விரைவில் நிர்வாகிகளை களையெடுக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இந்த தகவல் தெரிய வந்த முக்கிய நிர்வாகிகள் ‘கிலி’யில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.