முசிறி: போதையில் நடுரோட்டில் நின்று தகராறு செய்ததை கண்டித்த திருமண மண்டப மேலாளரை வாலிபர் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தார். திருச்சி மாவட்டம் முசிறி திருமுருகன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(52). அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன்(35). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு சாலையில் நின்று ரகளை செய்வது வழக்கம்.
நேற்று மாலை வழக்கம்போல் கணேசன் குடி போதையில் சுப்பிரமணியன் வேலை பார்க்கும் திருமண மண்டபம் அருகில் சாலையில் நின்று வருவோர், போவோரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனால் சுப்பிரமணியன் அவரை கண்டித்தார். மேலும் இதுகுறித்து முசிறி போலீசிலும் புகார் அளித்து விட்டு மண்டபத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கணேசனை கண்டித்ததுடன் எச்சரித்து சென்றனர். இதனால் கணேசன், சுப்பிரமணியன் மீது கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்றிரவு 10.30 மணியளவில் வேலை முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டுக்கு நண்பருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து புறப்பட்டார். திருமுருகன் நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு நின்ற கணேசன், டூவீலரை மறித்து தகராறு செய்தார். பின்னர் டூவீலரில் இருந்து இறங்கி வந்த சுப்பிரமணியனை மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பு, முதுகில் சரமாரி குத்தி விட்டு ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் முசிறி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுப்பிரமணியனை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு சுப்பிரமணியன் இறந்தார்.
தகராறில் கணேசனுக்கும், கையில் கத்தி கீறியதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்ததும் கணேசனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.