ராசிபுரம்: ராசிபுரத்தில் திருமண மண்டபத்தில் 30 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அறமத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவர், எலச்சிப்பாளையம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக உள்ள இவரது மகள் அகிலாவுக்கும், ராசிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகனான வேளாண்மைத்துறையில் பணியாற்றி வரும் நிவாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகேயுள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதனையொட்டி, மண்டபத்தில் உறவினர்கள் குவிந்தனர்.
அப்போது, ராஜவேல் குடும்பத்தினர் 30 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை மணமேடையின் அருகே மணப்பெண் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்தனர். இதில், மணப்பெண் வீட்டாருக்கு உறவினர்கள், நண்பர்கள் மூலம் மொய்யாக வந்த நகை, பணமும் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அதில் அவர்கள் மும்முரமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் மணப்பெண் அறைக்கு சென்றவர்கள், பீரோவில் வைத்திருந்த நகைகள், ரொக்கப்பணம் மாயமாகியிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். திருமண மண்டபத்தின் உள் மற்றும் வெளிப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவர் ஸ்கூட்டியில் வந்ததும், ஒருவர் கீழே நிற்க மற்றொருவர் மண்டபத்தில் உள்ளே சென்று வெளியே வந்ததும், அதன் பிறகு இருவரும் விரைவாக வெளியேறியதும் தெரியவந்தது. அந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.