Wednesday, June 19, 2024
Home » கல்யாண சமையல் சாதம்… விருந்தோம்பல் பிரமாதம்!

கல்யாண சமையல் சாதம்… விருந்தோம்பல் பிரமாதம்!

by Lavanya

உலகளவில் தமிழர்களுக்கென்று சில சிறப்புப் பண்புகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் மகுடமாய் விளங்குவது விருந்தோம்பல் பண்பாடுதான். தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையிலான விருந்தோம்பல்கள் நிகழ்கின்றன. ஆதி காலம் தொட்டே இவ்வாறு தமிழர்கள் விருந்தோம்பலில் குறிப்பிடத்தக்க குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகளும் நிறைந்து இருக்கின்றன. அவற்றுள் ஒன்றை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ஒருவரது வீட்டிற்குப் பசியால் வாடிய சில பெரியோர்கள் சென்றனர். அந்த இல்லத்தரசி அவர்களை அன்போடு வரவேற்றாள். அவளது வீட்டில் இருந்த வரகும் தினையும், தர்மம் கேட்டு வந்தவர்களின் பசியைப் போக்கப் பயன்படுத்தியதனால் தீர்ந்துவிட்டன. திருப்பித் தருவதாகக் கடன் வாங்கிச் சென்ற அண்டை அயலாரும், அந்நேரத்தில் உதவும் நிலையில் இல்லை. இதனால் அவள் என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தோடு இருந்தாள். அப்போது அவளுக்கு, அடுத்த உழவுக்குப் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்த ‘தினை விதை வீட்டில் இருக்கும் நினைவு வந்தது.

ஆனால், அந்த விதைக்குரிய தினையைச் செலவழித்து விட்டால், அடுத்து விதை விதைப்பதற்கு ஒரு சிறு மணி கூட வீட்டில் இல்லாமல் போய்விடுமே எனும் எண்ணமும் அவள் உள்ளத்தில் எழுந்தது. இருந்தபோதும், அதற்காக அவள் தயங்கவில்லை. இல்லம் வந்தவருடைய பசியைப் போக்குவது தன்னுடைய இல்வாழ்க்கையின் கடமை என்பதை அவள் முக்கியமாகக் கருதினாள். உடனே விதைத்தினையை மிகுந்த மகிழ்ச்சியோடு உரலில் இட்டு, குற்றியெடுத்து அவள் உணவு சமைத்தாள். விருந்தினரை உண்ண வைத்து பசியாற்றி மகிழ்ந்தாள் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது.இவ்வாறு வந்த விருந்தினரை முதலில் உண்ணச் செய்து மீதி உணவை உண்ணுகின்றவனுடைய விளைநிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும் என்பதை“ வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்’’என்ற குறள் மூலம் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய மரபைக் கொண்ட இம்மக்கள் இன்றும் தங்களின் மகிழ்ச்சி, சோகம் ஆகிய உணர்வுகளை ஊரைக் கூட்டி விருந்தளித்துப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளில் திருமணம் முதன்மையானதாக இருக்கிறது. திருமண நிகழ்வில் அளிக்கப்படும் விருந்து இன்றியமையாத ஒன்றாகவும் இருக்கிறது. திருமண விருந்து முறையில் பல மாற்றங்கள் இன்று நிகழ்ந்துள்ளன. திருமணத்தை முன்னிட்டு தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் விருந்தோம்பல் முறையை விளக்குகிறது இக்கட்டுரை.திருமண விருந்துதிருமணம் என்பது உறவினர்களையும் நண்பர்களையும் ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் கிராமங்களை எட்டாத அன்றைய நாட்களில் ஒரு திருமணம் முடிய ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் கூட ஆகிவிடும் (‘‘என் கல்யாணம் அஞ்சுநாள் கல்யாணம்” என்பர் முதியோர்) பெண்ணை மணமகன் இல்லத்தினர் சென்று அழைத்து வருவது மரபு. இதனைப் பெண் அழைத்தல், பரிசம் போடுதல் என்று குறிப்பிடுவர். திருமணத்திற்கு முதல் நாள் பெண் அழைக்க வரும் மணமகன் இல்லத்தினருக்கு விருந்தளிப்பது வழக்கம்.

அன்று மணமகள் ஊரைச் சேர்ந்தவர்களையும் விருந்துக்கு அழைப்பர். விருந்து தொடங்கியதும் வெளியூரில் இருந்து வந்திருக்கும் மணமகன் இல்லத்தினரை முதல் பந்தியில் (விருந்தினரை வரிசையாக அமரவைத்து உணவு பரிமாறுவது ‘பந்தி’ எனக் குறிப்பிடப்படுகிறது) அமர வைத்து உணவு பரிமாறுவர். அந்தப் பந்தியில் மேலும் இடம் இருந்தால் உள்ளூரில் உள்ள முக்கியமானவர்களை (மணியக்காரர், நாட்டாண்மைக்காரர், ஊராட்சிமன்றத் தலைவர் போன்றோர்) அமரச்செய்வர். அடுத்த பந்தியில் உள்ளூரில் உள்ள மணமகள் வீட்டுக்கு உறவுமுறைக்காரர்களை (மாமன், மைத்துனர் முறையுடையோர்) அமரச் செய்வர். பிறகு மணமகள் வீடு அமைந்திருக்கும் தெருவை விட்டு பிற தெருக்களில் இருந்து வந்திருப்பவர்களை அமரச்செய்வர். அதன் பிறகு மணமகள் வீடு அமைந்திருக்கும் தெருவில் உள்ளவர்கள், பங்காளிகள் ஆகியோரை அமரச்செய்வர். அடுத்து பெண்களை அமரச்செய்வர். கடைசியாக சிறுவர்கள் பந்தி நடைபெறும். இப்படிப்பட்ட பந்தியமைப்பு முறையே சிறந்த பண்பாடாகக் கருதப்படுகிறது.

ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறு நடைபெறாத இடங்களில் குழப்பமும், மோதல்களும்கூட நடைபெறும். ஒரு சில ஊர்களில் வெளியூரில் இருந்து வந்திருக்கும் விருந்தினரை ‘‘சாப்பிட வாங்க” என்று அழைத்தவுடன் ‘பந்திக்கு முந்தும்’ சில உள்ளூர்வாசிகள் போட்ட பந்தியில் அமர்ந்துவிடுவதும் உண்டு. அவ்வாறு அமர்பவர்கள் பண்பாடற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். வெளியூரில் இருந்து வந்திருப்பவர்கள் பொறுத்துக் கொள் வதும் உண்டு, கோபித்துக்கொள்வதும் உண்டு. விருந்து பரிமாறுவதில் சில முறைகள் சிறந்த பண்பாடாகக் கருதப்படுகின்றன. விருந்தினர் வந்து அமர்ந்த பிறகு பரிமாறுவதே சிறந்த பண்பாடாகக் கருதப்படுகிறது. ஒருசிலர் பொரியல், கூட்டு ஆகியவற்றை விருந்தினர் அமர்வதற்கு முன்பே பரிமாறிவிட்டு, விருந்தினர் அமர்ந்த பிறகு சோறு, குழம்பு பரிமாறுவர். இதுவும் நல்ல பண்பாடாகவே கருதப்படுகிறது. ஆனால் விருந்தினர் அமர்வதற்கு முன்பே அனைத்தையும் பரிமாறிவிடுவது சிறந்த பண்பாடாகக் கருதப்படுவதில்லை.

விருந்தளிப்பதற்குத் தேவையான உணவைச் சமைப்பதற்காக மணமகள் இல்லத்தினருக்குப் பங்காளி முறையுடையவர்களின் இல்லப் பெண்கள் குறிப்பிட்ட நாளன்று நண்பகலில் இருந்தே வந்து பணியாற்றத் தொடங்கிவிடுவர். உணவு சமைப்பது, பரிமாறுவது என அனைத்துப் பணிகளையும் பங்காளி முறை உடையவர்களே கவனிப்பர். உடன் பங்காளி இல்லாதவர்களுக்கு ஒன்றுவிட்ட பங்காளிகள் கவனிப்பர். பங்காளிகளுக்குள் பகை உணர்வுகள் இருப்பினும் அவற்றை மறந்து இதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்று சேர்வதும் உண்டு. ஒருசிலர் அவ்வாறு சேர்வதில்லை. அவ்வாறு சேராதவர்களுக் கிடையிலான உறவு ‘சாவு வாழ்வு இல்லை’ என்று குறிப்பிடப்படுகிறது.திருமண நாளன்று நடைபெறும் விருந்துக்காகச் சமைப்பதற்கு சமையல் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு உதவியாகக் காய்கள் நறுக்கிக் கொடுப்பது மணமகன் பங்காளி வீட்டுப்பெண்களைச் சார்ந்தது. உணவு பரிமாறுவது பங்காளி வீட்டு ஆண்களைச் சேர்ந்ததாகும். திருமணத்திற்கு முதல்நாள் இரவும் ஊர் விருந்து நடைபெறும். மணமகள் வந்த பின்பு உடன் வரும் மணமகள் வீட்டினரையே முதல் பந்தியில் அமர வைப்பர். எவ்வளவு நேரமானாலும் மணமகள் வீட்டினர் வந்து விருந்துண்ட பின்பே உள்ளூர்க்காரர்களுக்கு விருந்தளிக்கப்படும். இவ்வாறு வெளியூர் பந்தி, உள்ளூர் பந்தி, பெண்கள் பந்தி, சிறுவர் பந்தி ஆகிய அனைத்துப் பந்திகளும் முடிந்த பின்பு சில தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கப்படும். தொழிலாளர்களுக்கு உணவளிப்பதற்கென்று ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒருவர் இருப்பார். அளவறிந்து அளிப்பார் என்பதனால் அவரையே அளிக்குமாறு கேட்டுக்கொள்வர்.இதேபோல வெவ்வேறு நிகழ்ச்சிகளில், வெவ்வேறு தருணங்களில் விருந்தோம்பல் முறை எவ்வாறு இருக்கும் என்பதை அடுத்தடுத்த இதழ்களில்
காணலாம்.

– இரத்தின புகழேந்தி.

You may also like

Leave a Comment

sixteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi