சென்னை: அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சலிங் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
* மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
* மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* தற்போது பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை, விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்ற வேண்டும்.
* அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் போது ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தனிப்பட்ட லாக்இன் ஐடியை பயன்படுத்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பொதுமாறுதல் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகளை பொறுத்தவரையில், விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் அளித்த பிறகு ஒரு பிரதியை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும்.
* மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கடவுச் சொல்லைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
* மாறுதல் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும் போது அதற்குரிய சான்று, முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும்.
* மேல்நிலைப் பிரிவில் உயிரியல் பாடப்பிரிவில் பணியாற்றும் முதநிலை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் போது, தாம் படித்த முதன்மைப் பாடத்தை குறிப்பிட வேண்டும். மற்றும் எந்த பணியிடத்தில் பணிபுரிகிறார் என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.
* கணவன், மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி, அரசு மற்றும் அரசுத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தையும், அதற்கான சான்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்துக்கான தொலைவு 30 கிமீ மேல் உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
* மனமொத்த மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பொது மாறுதல் கவுன்சலிங் முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.
* மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.