காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறி துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகே, நெசவாளர்களின் நெசவு கூலியை வங்கியில் செலுத்துவதை தவிர்த்து, அவரவர் கையில் வழங்கக்கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க நடவடிக்கை குழுவினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்கள் நெசவு செய்யும் வேட்டி சேலைகளுக்கு நெசவு கூலியாக ரொக்க பணம் பெற்று வந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் கைத்தறி நெசவாளர்களின் நெசவு கூலியை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கைத்தறி துணி நூல்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நெசவு தொழிலுக்கான கூலியை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்ற கைத்தறி துணிநூல் துறை ஆணையை, காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தும் நடைமுறையை மேற்கொண்டு வருகின்றனர். பட்டு கூட்டுறவு சங்கங்களின் இந்த அறிவிப்பினை, அறிந்த கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, நெசவாளர்களுக்கான நெசவு கூலியை வங்கியில் செலுத்துவதை கண்டித்தும், வழக்கம் போலவே நெசவாளர் கைகளில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், 200க்கும் மேற்பட்டோர் நெசவாளர்கள், கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள கைத்தறி துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அருகே நெசவாளர் கூட்டுறவு சங்கம் முன்னாள் தலைவர்களும், உறுப்பினர்களும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் ஒன்றுகூடி நெசவுக்கான கூலியை வங்கி கணக்கில் செலுத்தக்கூடாது, நெசவாளர் கைகளிலேயே வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, கைத்தறி துணிநூல் துறை துணை இயக்குநரிடம், பட்டு நெசவு தொழிலுக்கான கூலியை தொடர்ந்து ரொக்கமாகவே கூட்டுறவு சங்கங்களிலேயே வழங்க வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழுவினர் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் முருகன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வள்ளி நாயகம், இயக்குநர் சோமசுந்தரம், சிஐடியு கைத்தறி சம்மேளனத் தலைவர் முத்துக்குமார், சிஐடியு செயலாளர் ஜீவா, பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் விஸ்வநாதன், வாசு, யுவராஜ் உள்ளிட்ட ஏராளமான நெசவாளர் சங்க உறுப்பினர்களும், நெசவாளர்களும் கலந்துகொண்டனர்.