திருத்தணி: திருத்தணி அருகே 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, நெசவாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீ காளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி, அத்திமாஞ்சேரி பேட்டை, வாங்கனூர், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கூலி உயர்வு வழங்க வேண்டும், நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநில அரசு குறைந்தபட்ச கூலி வழங்கும் சட்டத்தை அரசாணையாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 2வது நாளாக நெசவாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், விசைத்தறிகள் முடங்கி லுங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நெசவாளர்களுடன், அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று நெசவாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.