புதுடெல்லி: தமிழ்நாட்டில் வெப்ப அலைகளால் இறப்பு விகிதம் குறைவு என திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பியுமான கனிமொழி, கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் வெப்ப அலைகள் காரணமாக நிகழ்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அறிவியல்-தொழில் நுட்பம் மற்றும் புவிஅறிவியல் துறை இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர்.ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ” நாடு முழுவதும் வெப்ப அலைகளால் 2013ம் ஆண்டில் 1,216, 2014ல் 1248, 2015ல் 1908, 2016 ல் 1338, 2017ல் 1127, 2018ல் 890, 2019ல் 1274, 2020ல் 530, 2021ல் 374, 2022ல் 730 பேர் மரணம் அடைந்தனர்.குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. கடந்த பத்து வருடங்களில் 5 பேர் தான் தமிழகத்தில் வெப்ப அலைகளால் இறந்தவர்கள் ஆவர்.அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் பொதுமக்கள், 2013 ல் 418, 2014ல் 244, 2015ல் 654, 2016ல் 312, 2017 ல் 231, 2018ல் 97, 2019ல் 128, 2020ல் 50, 2021 ல் 22, 2022 ல் 47 பேர் இறந்தனர். தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (என்சிஆர்பி), உள்துறை அமைச்சகம் ஆகியவை வழங்கிய விவரங்கள் மூலமாக இந்த தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன, “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.