சென்னை: சென்னையில் இருந்து 168 பயணிகளுடன், அந்தமான் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், அங்கு மோசமான வானிலை நிலவுவதால், அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பியது. நேற்று பிற்பகல், சென்னையில் இருந்து மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், இரண்டாவது முறையாகவும், அங்கு தரை இறங்க முடியாமல் நேற்றிரவு சென்னைக்கு திரும்பியது.
இதேபோல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 154 பயணிகளுடன், புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் தரை இறங்க முடியாமல், கொல்கத்தா விமான நிலையம் சென்று தரை இறங்கி உள்ளது. இதை அடுத்து அந்தமான் சுற்றுலா பயணிகள் 168 பேர், சென்னை விமான நிலையத்திலும், 154 பேர் கொல்கத்தா விமான நிலையத்திலும் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் கூறுகையில், ‘‘பயணிகள் அனைவரும் விமான கட்டணத்தை திருப்பி பெற்றுக் கொண்டு, உங்கள் பயணத்தை ரத்து செய்து விடுங்கள்’’ என்றனர். ஆனால் பயணிகள் தரப்பில், ‘‘நாளை (இன்று) எங்களை விமானத்தில் அந்தமானுக்கு அழைத்து செல்லுங்கள். நீங்கள் பயண கட்டணம் திருப்பித் தர வேண்டாம்’’ என்று கூறினர். ஆனால் விமான நிறுவனம் இதை ஏற்கவில்லை. இதனால் பயணிகள் மற்றும் விமான நிறுவனம அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நடந்தது.