சென்னை: கொரோனா குறித்து பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது; தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 60 வயது முதியவருக்கு நீரழிவு உள்ளிட்ட இணை நோய்கள் இருந்துள்ளன.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவந்து நல்லதே தவிர கட்டாயம் இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் இருந்ததன் காரணத்தால் 2023 மே 5ம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. பதற்றம் வேண்டாம். தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று கூறியுள்ளார்.