அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகள் என்ற முத்திைரயோடு, நூற்றுக்கணக்கான இந்தியர்களை திருப்பி அனுப்பினார். அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டது சர்ச்சையானது. இப்படி சர்ச்சைகளின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக கூடிக்கொண்டிருக்க, மோடி அரசு வாயை திறக்கவே இல்லை. அடுத்ததாக ஒரு சர்ச்சை கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு மோடி அரசு மிகவும் தாமதமாக கருத்து கூறியுள்ளது.
அதாவது இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு (யு.எஸ்.எய்ட்) ஒதுக்கி இருந்த ரூ.182 கோடி நிதியுதவியை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. ‘’இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. வேறு யாரையோ ஆட்சியில் அமர்த்த ஜோ பைடன் நிர்வாகம் முயன்றுள்ளது’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஆளும் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. ‘வெளிநாட்டு சக்திகளின் கருவியாக ராகுல் காந்தி செயல்படுகிறார்’ என்று பாஜக கடுமையாக விமர்சித்தது. அதே நேரத்தில், ‘இந்தியாவின் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க அரசு நிதியுதவிகள் குறித்த வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. அமெரிக்க அதிபர் கூறிய அன்றே ஒன்றிய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு அல்லது கண்டனத்ைத தெரிவித்து இருக்க வேண்டும்.
நீண்ட நாளுக்கு பிறகு இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசுடன் இணைந்து அமெரிக்க அமைப்பு ரூ.6,490 கோடி நிதியுதவியுடன் இந்தியாவில் 7 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக 2023-24ம் நிதியாண்டில் ரூ.825 கோடி நிதியை அந்த அமைப்பு விடுவித்தது. வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக எந்த நிதியும் பயன்படுத்தப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தும் விவகாரத்தில் டிரம்ப் நடவடிக்கைக்கு சிறிய நாடுகளான மெக்சிகோ, கொலம்பியா ஆகியவை கூட கடும் எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் பத்து தினங்களுக்கு முன்பு டிரம்பை நேரில் சந்தித்த மோடி, இந்தியர்களை கை, காலில் விலங்கு போட்டு அழைத்து வந்ததற்கு கண்டித்திருக்கக்கூட வேண்டாம். ஆனால் இந்திய மக்களின் வருத்தத்தையாவது தெரிவித்து இருக்கலாம் என்பது கடைக்கோடி மக்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை, இந்தியர்களுக்கு எதிராக செயல்படும் நேபாளம் உள்ளிட்ட சிறிய நாடுகள் கூட நமது நாட்டின் இறையாண்மையை உரசிப்பார்க்கும் நிலையில் இந்தியாவின் தேசிய நலனை பாதுகாக்க மோடி அரசு தவறிவிட்டதோ என்ற ஐயம் எழதான் தோன்றுகிறது.