நன்றி குங்குமம் டாக்டர்
ரத்தப் புற்று நோய் என்பதை அக்யூட் மயலாய்டு லூக்யீமியா என மருத்துவ உலகில் சொல்கிறோம். அதன் சுருக்கம் தான் AML. அக்யூட் என்றால் குறுகிய காலகட்டத்தில் பிரச்னை ஏற்படுத்துதல். க்ரானிக் என்றால் நெடு நாள் தொடர்ந்து இருக்கும் பிரச்னை என்று அர்த்தம். நமது உடலைப் பொருத்தவரை ரத்தம் என்பது மிக முக்கியமான திரவ நிலையில் இருக்கும் உறுப்பு. எப்படி இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகங்கள் முக்கியமோ அதே போல நமது ரத்தம் எனும் உறுப்பின் நலனும் முக்கியமாகும்.
இத்தகைய ரத்தத்தில் குருதி நீர் (ப்ளாஸ்மா) மற்றும் அதில் கலந்துள்ள ரத்த செல்களான சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்கள் தட்டணுக்கள் ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் பெரிய எலும்புகளுக்கு உள் இருக்கும் மஜ்ஜையில் இருந்து ஊற்றெடுக்கின்றன. நமது எலும்புகளின் மஜ்ஜைக்குள் புதிதாக ரத்த செல்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் உள்ளன. அவற்றில் இருந்து நாள்தோறும் ஏன் நொடிக்கு நொடி பழைய ரத்த செல்களைப் புதுப்பிக்க புதிய ரத்த செல்கள் தோன்றுகின்றன. இந்த ரத்த ஸ்டெம் செல்கள் இருவகைகளில் ரத்த
செல்களை உருவாக்குகின்றன.
முதல் வகை
லிம்ஃபோசைட்ஸ் – இவைதான் நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் அடிப்படை செல்கள்.
இரண்டாம் வகை
மயலாய்டு செல்கள்
இந்த மயலாய்டு செல்களில் இருந்து தான் சிகப்பணுக்கள் உண்டாகின்றன. இதில் தான் ஹீமோகுளோபின் உள்ளது. இந்த செல்கள் மூலம் தான் உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் சென்று சேருகிறது. வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ( ரத்த உறைதலுக்கு உதவும்) ஆகியவை உருவாகின்றன.
ஏ.எம்.எல்லில் என்ன நடக்கிறது?
இந்த மயலாய்டு செல்கள் மிதமிஞ்சி உற்பத்தி ஆகத் தொடங்கி சராசரியாக இருக்க வேண்டிய நார்மல் செல்கள் அளவில் இருந்து நாளடைவில் மயலாய்டு செல்கள் மிகவும் அதிகமாகி, ரத்தத்தில் சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் ஆகியவை அளவில் மிகவும் குறைந்து விடுகின்றது. நாளடைவில் எலும்பு மஜ்ஜை முழுவதுமாக செயலிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இத்தகையோருக்கு
– அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல்
– உடல் மெலிதல்
– ரத்த சோகை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
நோயைக் கண்டறிந்தவுடன் இந்த பிரச்னைக்குரிய மயலாய்டு செல்களை அழிக்குமாறு மருந்துகள் ரத்த நாளம் வழியாக வழங்கப்படும். இதைத்தான் கீமோதெரபி என்கிறோம். கூடவே தற்போது நவீன மற்றும் காஸ்ட்லியான மருந்துகளான மோனோ குளோனல் ஆன்ட்டிபாடி கள் வழங்கப்படும். சிலருக்கு இந்த சிகிச்சையிலேயே நோய் கட்டுப்பட்ட நிலைக்கு வரும். ஆனால் சிலருக்கு கட்டுப்பாடு வராது. அவர்களுக்கு எலும்பு மஜ்ஜையில் ஊடுகதிர் ( ரேடியேஷன்) சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் எலும்பு மஜ்ஜையில் புற்று நோய் உண்டாக்கும் மயலாய்டு செல்கள் உற்பத்தி கட்டுப்படுத்தப்படும்.
இந்த நோய்க்குரிய தீர்வு என்பது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அல்லது ரத்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. அதாவது நார்மலாக இருக்கும் வேறு ஒருவரிடம் இருந்தோ அல்லது நோயாளியின் நல்ல எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து அவருக்கு மீண்டும் உட்செலுத்தும் போது மீண்டும் எலும்பு மஜ்ஜை புத்தாக்கம் பெற்று புதிய செல்களை நல்ல நிலையில் உருவாக்கத் துவங்கும். இதற்கு நார்மல் மனிதர் ஒருவரிடம் இருந்து எப்படி ரத்த தானம் பெறுகிறோமோ அதே போல ரத்த நாளம் வழியே ஸ்டெம் செல்களைப் பெற முடியும்.
ஸ்டெம் செல்கள் கொடையாக வழங்க உள்ளவருக்கு சில நாட்களுக்கு முன்பு நன்றாக ஸ்டெம் செல்களை வளர்க்கும் ஊசி செலுத்தப்படும். பிறகு அவரது ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு அது லூக்யீமியா உள்ள நோயாளிக்கு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட ஸ்டெம் செல்கள் நோயாளியின் உடலில் சென்று வேலை செய்யத் துவங்கியதும் நிலைமை சரியாகும். எனினும் இது வார்த்தையால் சொல்வதைப் போன்று நிஜத்தில் எளிதானதல்ல.
வேறு நபரின் ஸ்டெம் செல்களை மற்றொருவருக்கு செலுத்தும்போது, இது நம்முடைய ஸ்டெம் செல்கள் இல்லை என பெறுபவரின் உடல் அதனை புறக்கணிக்கச் செய்யும். சில நேரங்களில் நோயாளியின் எதிர்ப்பு சக்தி எதிர்த்து ஒன்றுமில்லாமல் செய்து விடவும் வாய்ப்பு உண்டு. இதை மாற்று மஜ்ஜை செயலிழப்பு என்று கூறுகிறோம். இதனால், ஸ்டெம் செல் ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டும் அது ரிஜெக்ட் ஆகிவிடவும் வாய்ப்பு உண்டு.
இவ்வாறு நடக்கும் போது ரத்தத்தில் உள்ள அனைத்து செல்களும் அளவில் மிகவும் குறைந்து விடும். எனவே நோயாளிக்கு தொடர்ச்சியாக ரத்தம் ஏற்றப்பட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் இருப்பார்கள். இதுபோன்ற நோயாளிகள் நலனுக்காகவே ரத்த தானம் தேவைப்படுகிறது. தொடர்ந்து ரத்த தானம் செய்வோம்.
தொகுப்பு: அ.ப.ஃபரூக் அப்துல்லா