தன்னுடைய பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது பெற்றோர்களின் ஆசையாக இருக்கிறது. அதுவே மாணவர்களின் கனவாகவும் இருக்கிறது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அதை அடைவதற்காக மாணவர்களும் பெற்றோர்களும் ஒருவித டென்ஷனுடன் ஒவ்வொரு நாள் பொழுதையும் கழிக்கிறார்கள். அப்படி இல்லாமல் இயல்பாக மகிழ்ச்சியாக வெற்றி பெறுவது எப்படி? என்பதற்கு உங்களுக்கு வழிகாட்ட வருகிறார் கல்வியாளர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார். ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். கல்வி இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதியவர். வாரம் தோறும் கல்வி மலர் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்ட வருகிறார். இன்றைய கல்விமுறையில் இருக்கும் சிக்கல்களையும் அதற்கான தீர்வுகளையும் கூட நம்மோடு பகிர்ந்துகொள்வார்.
அதிகாலை நிகழ்த்தும் அதிசயங்கள்:
கிராமம் என்றால் ஆண்கள் எழுந்து அறுவடைக்குப் புறப்படுவார்கள், வயசுப் பெண்கள் வாசலில் கோலமிடும் வளையோசை கேட்கும். சைக்கிளில் பெல் அடித்துக்கொண்டே இளைஞர்கள் பால் கேன்களோடு விற்பனைக்குப் போவார்கள். நகர்ப்புறங்களில் வாக்கிங் செல்வதற்காகப் புறப்பட்டு இருப்பார்கள். செய்தித்தாள்களைப் புரட்டும் சப்தம் கேட்கலாம். வாசலில் மாட்டி வைத்திருக்கும் பையில் பால் பாக்கெட் வந்து விழும். வாகனங்கள் சாலைகளில் மெல்ல ஊரக் தொடங்கியிருக்கும் இவையெல்லாம் கேட்டிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். காலைப் பொழுதை இவ்வளவு ரம்மியமாக ரசிக்க வேண்டும். எத்தனை மாணவர்களுக்கு இது இன்று வாய்க்கிறது? காலை நேர டியூஷனுக்கு புறப்பட வேண்டும். டியூஷன் முடித்து வந்தால் பள்ளி வேனுக்குப் புறப்பட வேண்டும் என்று பரபரப்பாக த் தொடங்குகிறது இன்றைய பள்ளி மாணவர்களின் காலைப்பொழுது. ஒவ்வொரு நாளையும் பள்ளி மாணவர்கள் பரபரப்பாகத் தொடங்கி, பரபரப்பாகவே முடிக்கிறார்கள். இன்றே இந்த வேலையை முடிக்க வேண்டும். இப்போதே முடிக்க வேண்டும் என்று மூச்சிரைக்க ஓடுகிறார்கள். இது ஒருவித படபடப்பையும் பதற்றத்தையும் மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது. இந்நிலை நிச்சயம் மாற வேண்டும். பெற்றோர்கள் மாற்ற வேண்டும்.அதற்கு முதலில் அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதிகாலைப்பொழுதை ரசிக்க கற்றுக் கொடுங்கள். இந்தப் பழக்கம் அவர்கள் வாழ்க்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். எவ்வளவு வேலை என்றாலும் அதை முடிக்கக்கூடிய சக்தி உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
என்ன நன்மைகள்? எப்படிக் கிடைக்கும்?
காலைப்பொழுதில் சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் ஒளிக்கதிர்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால்தான் யோகப்பயிற்சிகளில் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்தது என்று சொல்கிறார்கள். அதிகாலை சூரியக்கதிர்கள் நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பும் உற்சாகமும் கிடைக்கின்றன. அதிகாலை எழுந்து நீங்கள் செய்கிற தியானம் ஒவ்வொரு செயலையும் மகிழ்ச்சியாகச் செய்ய உதவும்.
அதிகாலை எழுவதால், நாள் முழுவதும் உங்கள் மனமும் உடலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். காலையில் மாசற்ற தூய்மையான ஆக்சிஜனை சுவாசித்தால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னைகள் வராது. அதிகாலையில் யோகா செய்வது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை தரும். அதிகாலை எழுவதால் சரியான நேரத்தில் மலம், சிறுநீர் கழிந்து, உடலில் உள்ள நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும். உடல் நலனுக்கு மட்டுமல்ல, மன நலனுக்கும் அதிகாலையில் எழுவது சிறந்தது.அறிவியல்படி அதிகாலை எழுந்து நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் குளிப்பதால் அன்று நாள் முழுவதும் நமது உடல் சீரான வெப்பநிலையில் இயங்குகிறது. அன்று வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ குறைவாக இருந்தாலும் அதிகாலைக் குளியல் நமது உடலின் வெப்பநிலையை பேலன்ஸ் செய்து சீராக வைக்கிறது. அதிகாலையில் எழுந்து நாளை தொடங்குவதால் அவசரம் இன்றி வேலைகளைப் பார்க்கமுடியும். எந்தெந்த பாடத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்று மாணவர்களால் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.காலையில் எழும்போது மூளையும் உடலும் அமைதியான சூழலில் இருப்பதால் மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். அதிகாலை எழுந்து படிப்பதனால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். அதிகாலை எழும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் மாணவர்கள் இரவில் சீக்கிரமாகவே தூங்குவதற்குச் செல்கிறார்கள். இன்று இளைஞர்களிடம் காணப்படும் மோசமான பழக்கம் இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் பகலில் அதிக நேரம் தூங்குவதும்தான். இது உடல் பருமன் பிரச்னை மனஅழுத்த பிரச்னை என்று பல்வேறு சிக்கல்களைக் கொண்டு வருகிறது என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். எனவே, முடிந்தவரை அதிகாலையில் எழுந்து, இரவு பத்துமணிக்குள் தூங்குவதற்கு மாணவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து மிக மகிழ்ச்சியாக அன்றையப் பொழுதை எதிர்கொள்ளுங்கள். இன்றைக்கு வாராந்திரத் தேர்வு இருக்கிறது, வீட்டுப் பாடத்தை நாம் முடிக்கவில்லை, ரெக்கார்டு நோட் எழுதி முடித்தாக வேண்டும் என்று உடனே அனைத்து டார்கெட்டுகளையும் மனசுக்குள் கொண்டு வந்து நிறுத்தி உங்கள் மனதை இறுக்கமாக்கி விடாதீர்கள்! ரெக்கார்டு நோட், மாதாந்திரத் தேர்வு எல்லாம் பள்ளிவாழ்க்கையின் படிநிலைகள் தான். இது போன்ற வேலைகளை எல்லாச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவே எதிர்கொள்ள வேண்டும்.நகர்ப்புற மாணவர்கள் ஓர் அதிகாலைப் பொழுதில் கிராமத்திற்குச் சென்று வாருங்கள்.அங்கு மாணவர்கள் பால் கறந்து விற்பனை செய்யப் போவார்கள், வயலுக்குச் சென்று களை பறித்துவிட்டு வருவார்கள், வீட்டில் வளர்க்கிற கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டு வந்து போடுவார்கள், இவற்றையெல்லாம் முடித்துவிட்டு அவர்களுக்கு காலை நேரத்தில் படிப்பதற்கும் நேரம் இருக்கும். அவர்கள் பள்ளிப்படிப்புடன் வீட்டு வேலைகளையும் செய்கிறார்கள். அதுவே அவர்களுக்குச் சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது.மாணவர்களே அதிகாலையை அனுபவியுங்கள் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு அதிகாலைப் பொழுதை அனுபவிக்கும் வாய்ப்பைக் கொடுங்கள்!
– இன்னும் படிப்போம்…