நன்றி குங்குமம் டாக்டர்
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் உடற்பருமன் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம். தவிர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.இந்தியாவை பொருத்தவரை டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி குழந்தைகளிடையே உடற்பருமன் அதிகரித்துக் கொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் வசதியுள்ள குடும்பங்களில்தான் குழந்தைகளின் எடை அதிகரிப்பு அதிகமாக காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் முறையான சரிவிகித உணவு உண்ணும் பழக்கம் இல்லாததும், உடற்பயிற்சி இல்லாதது போன்றவையும் ஆகும்.
ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள்:
விளம்பரங்களில் வரும் ஜங்க் உணவுகளால் கவரப்பட்டு கொழுப்பு நிறைந்த உணவு, மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள் குறைந்த உணவுப் பொருட்களை குழந்தைகள் வாங்கி உண்கின்றனர். இது தவிர இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதுவும் உடல் எடை அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது.குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுதல் இல்லாமை, உடற்பயிற்சியின்மை, நீண்ட நேரம் தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியின் முன் அமர்ந்திருப்பது போன்றவையும் ஒரு காரணமாகிறது.
குழந்தையின் அளவுக்கதிகமான உடல் எடை கணக்கெடுப்பு என்பது உணவுப் பழக்க வழக்கங்கள், குடும்ப பழக்க வழக்கங்கள் ஆகியவை கருத்தில் கொண்டு எடுக்கப்படுகிறது. ஏனெனில் இந்தப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் உடல் எடை அதிகரிக்க காரணங்கள் ஆகிறது. இது தவிர ஹார்மோன்கள் மற்றும் மரபணு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
உலக அளவில் நடத்திய வேறுபட்ட ஆய்வுகளில் குழந்தை பருவ உடற்பருமனால் வளர்ந்த பிறகு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது
கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பருமனை சரி செய்யும் வழிமுறைகள்:
எடையை குறைப்பதை விட இருக்கும் எடை அதிகரிக்காமல் பராமரித்தல்தான் முக்கியமாக இருக்க வேண்டும்.பின்னர், எடை குறைப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தல் வேண்டும். ஒரு வாரத்திற்கு 0.5 கிலோ வீதமாக 10 விழுக்காடு எடையை குறைத்தல் என்பது எடை குறைத்தல் முயற்சியில் சரியானதாக இருக்கும். இந்த எடை குறைப்பு குறைந்தது 6 மாதகாலம் பராமரிக்கப்பட வேண்டும்.
செய்முறை மாற்றங்கள்
உடல் உழைப்பை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தை கைவிடுதல், குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை அதிகரித்தல் போன்றவை பலன் தரும்.
உணவுப் பழக்க ஆலோசனை
1-6 வயது உள்ள குழந்தைகளுக்கு 46 OZ மற்றும் 7-18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 82 OZ பழரசம் ஒரு நாளைக்கு கொடுக்கலாம். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளையில் உணவு தருவது.
13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை குறைத்து தருவது. 18 வயது வரை உள்ள இளவயதினருக்கு கொழுப்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவை தவிர்ப்பது. உதாரணமாக, உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 1800 -2000 கலோரி மட்டுமே இருத்தல் வேண்டும்.
ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்:
உணவு விஷயத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். சரிவிகித உணவை உண்ண கற்றுத் தர வேண்டும்.ஒரே நேரத்தில் அதிக உணவு எடுப்பதை தவிர்த்து பல நேரங்களாக பிரித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குறைந்த அடர்த்தியுள்ள உணவுப் பொருள் குழந்தைகளின் ஆற்றலைச் சமப்படுத்தும்.
குழந்தைகளின் உணவு விருப்பத்தை தடுப்பதற்கு பதிலாக ஆசையை தூண்டிவிடும் புது உணவுப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
உடற்பருமன் வராமல் தடுக்கும் முறைகள்:
நேரம் தவறாமல் சாப்பிடுதல்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்தல்.
தினசரி அரைமணி நேரமாவது உடற்பயிற்சி (ஓடி ஆடி விளையாடுதல்) பழக்கத்தை மேற்கொள்ளுதல். சாப்பிடுவதற்கு பெரிய அளவு தட்டுகள் பயன்படுத்தாமல், சிறிய அளவிலான தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை உபயோகித்தல். இதன் மூலம் உணவின் அளவு குறைவாக உண்ணப்படும். இனிப்பு வகைகள், சாக்லெட் வகைகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நலம். குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர்பள்ளி வரை உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பற்றி கற்பித்தல், வாரத்தில் 23 முறை 30-45 நிமிடம் உடற்கல்வி கற்பித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
தொகுப்பு: ரிஷி