திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த 16 வயதான ஒரு சிறுவன், கோவை மாவட்டம் துடியலூரில் கடந்த 12ம்தேதி வழிப்பறியில் ஈடுபட்டான். கோவை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர். கோவை முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 15 நாட்கள் தினமும் 8 மணி நேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவி புரிய நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி முன்னிலையில் சிறுவன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டான். இனிமேல் எந்த ஒரு குற்ற செயலிலும் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, 15நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்ய அறிவுறுத்தினார். அதன்பேரில் காலை 9 மணி முதல் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசார் உதவியுடன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அந்த சிறுவன் ஈடுபட்டான்.