சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வயநாட்டில் எதிர்பாராமல் பெய்த அதி கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கடந்த 31ம்தேதி கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட கட்சியின் மத்தியக்குழு நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், தாராளமாக நிதி வழங்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் வழங்கிய ரூ.35,97,611 இன்று தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மத்தியக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.