புதுடெல்லி: சமீபத்தில் ஏற்பட்ட வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த ஆன்லைன் சந்திப்பு வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது: பயங்கர நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து வயநாடு சீராக மீண்டு வருகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தாலும், அனைத்து சமூகங்கள், அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் நிவாரணப் பணிகளில் ஒன்றிணைவதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வயநாடு மக்களின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலாவை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.
மழை நின்றவுடன், அப்பகுதியில் சுற்றுலாவை புத்துயிர் பெறச் செய்யவும், மக்கள் மீண்டும் வருகை தரவும் நாம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். வயநாடு ஒரு பிரமிக்க வைக்கும் சுற்றுலா தலம். அது, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை அதன் அனைத்து இயற்கை வசீகரத்துடன் மீண்டும் வரவேற்க விரைவில் தயாராகும். கடந்த காலங்களில் நாம் செய்தது போலவே, அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைவோம். இவ்வாறு கூறி உள்ளார்.