திருவனந்தபுரம்,: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை உள்பட பகுதிகளில் கடந்த வருடம் ஜூலை 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பீதி இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த முறை நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த பகுதியில் ஓடும் புன்னப்புழா ஆற்றில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும் வெள்ளத்தில் பாறைகளும், மரங்களும் உருண்டு வந்தன. மேலும் சகதி கலந்த வெள்ளம் வந்ததால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. நேற்று காலை வழக்கம் போல அங்குள்ள தோட்டங்களுக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் பயத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
கடந்த முறை நிலச்சரிவு ஏற்பட்டபோது சூரல்மலை பகுதியில் ராணுவத்தினர் அமைத்திருந்த தற்காலிக இரும்புப் பாலம் உள்ள பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து அறிந்ததும் போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் சூரல்மலை பகுதிக்கு விரைந்தனர். சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ தெரிவித்தார். நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
நேற்று ஒரே நாளில் சூரல்மலை பகுதியில் 100 மி.மீட்டர் மழை பெய்தது. இன்றும் பலத்த மழை பெய்யும் எ்னறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பலத்த மழை பெய்தபோதிலும் சம்பவ இடத்திற்கு உடனடியாக அதிகாரிகள் வரவில்லை என்றுகூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்தமுறை நிலச்சரிவு ஏற்பட்டபோது மலையில் இருந்தவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள், மரங்கள் மற்றும் பொருட்களை இதுவரை அகற்றாததை கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.