டெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு வயநாடு செல்கிறார். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 10 நாள் ஆகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 418 பேர் பலியாகி உள்ளனர். 224 உடல்களும், 189 உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி பகுதியில் இருந்து 148 உடல்களும், 28 உடல் பாகங்களும் கிடைத்தன.
சாலியார் ஆறு, நிலம்பூர் வனப்பகுதியில் இருந்து 76 உடல்களும், 161 உடல் பாகங்களும் கிடைத்தன. இன்னும் 152 பேரை காணவில்லை என்பதால் அவர்களது உடல்களை தேடும் பணி இன்றுடன் 10வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த நிலையில், வயநாட்டில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) அவர் டெல்லியில் இருந்து வயநாடு செல்கிறார். கண்ணுர் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பிரதமருடன் கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.