சென்னை: நிலச்சரிவால் பேரழிவுக்கு உள்ளான வயநாடுக்கு ஏன் இதுவரை மோடி செல்லவில்லை என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே பாஜ சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026ல் தமிழகத்தில் இலை துளிர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும் என்றார். அப்போது அவரிடம், கேரள வயநாட்டில் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை தேசிய பேரிடராக அறிவிக்காதது ஏன். இதுவரை பிரதமர் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பார்வையிடவோ, மக்களுக்கு ஆறுதல் கூறவோ அந்த இடத்திற்குச் செல்லாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அந்த இடத்தைவிட்டு விறுவிறுவென்று தமிழிசை சென்றார்.