மும்பை: கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி நன்கொடையாக நடிகர் பிரபாஸ் வழங்கினார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 9 நாள் ஆனது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டி விட்டது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய இன்னும் 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் பலர் நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, துல்கர் சல்மான், நடிகர் ஜெயரம், பகத் பாசில், நடிகைகள் ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நிதி வழங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ரூ.2 கோடி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் வழங்கி உள்ளார்.