வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அரசு பிடிவாதம் : மனிதாபிமானமற்ற செயல் என கேரள அரசு கண்டனம்!!
திருவனந்தபுரம் : ஒன்றிய அரசின் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று கேரள அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயம், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் மண்ணில் புதையுண்டர். அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி மண்ணில் புதையுண்ட சிலரை காப்பாற்றி இருந்தாலும், இதில் 251 பேர் உயிரிழந்தனர் 47 பேரைக் காணவில்லை. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு விபத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
அத்துடன் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 3000 கோடி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கோரியிருந்தது. ஆனால் எந்த தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் உள்ள ரூ.390 கோடியை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இதற்கு வருவாய்த் துறை அமைச்சர் ராஜு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார்.
வயநாடு விபத்தை அதி தீவிர விபத்து என்று எல்3 பிரிவில் கூட சேர்க்க மறுப்பதாகவும் கேரள மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு சவால் விடுவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே வயநாட்டிற்கு பிறகு மழை, புயல், பாதிப்பு ஏற்பட்ட ஆந்திராவுக்கும் பீகாருக்கும் சிறப்பு நிதி வழங்கிய ஒன்றிய அரசு, கேரளாவிற்கு ஏன் நிதி வழங்கவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த புறக்கணிப்பிற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.


