திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நடிகர் மோகன் லால் நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது சொந்த நிதியாக ரூ.3 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இந்த ஊருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. முன்பு எனக்கு இங்கு சொந்தமாக நிலம் இருந்தது. கடந்த சில நாட்களாக மனதை பாதிக்கும் விஷயங்களைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏராளமானோர் உற்றார், உறவினர்களை இழந்து வாடுகின்றனர்.
ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்கள் உள்பட மீட்புப் படையினரும், உள்ளூர் மக்களும் மேற்கொண்டு வரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கது. நான் அங்கமாக உள்ள மெட்ராஸ் பட்டாலியன் இங்கு சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலச்சரிவில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். மலைக்கு மேலே சென்று பார்த்தபோது தான் இந்த நிலச்சரிவின் பாதிப்புகள் எனக்குத் தெரியவந்தது.
என்னுடைய பெற்றோரின் பெயரில் செயல்பட்டு வரும் விஷ்வ சாந்தி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ.3 கோடி வழங்கப்படும். நிலச்சரிவால் உருக்குலைந்த இங்குள்ள பள்ளியை சீரமைத்து தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.