பனாஜி: கேரள மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை. சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மலைப்பகுதியில் விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டியதால்தான் இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவா மாநில நகர மற்றும் கிராம திட்டமிடல் அமைச்சர் விஸ்வஜித் ரானே நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கடந்த 6 மாதமாக மாநிலத்தில் மலைகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் மீறி சட்டவிரோதமாக மலையை வெட்டி பாறை, மணல் எடுப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன. வெட்டப்படும் நிலத்தை பொறுத்து ₹1 லட்சம் முதல் ₹1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.