டெல்லி: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவையில் தவறான தகவல் அளித்ததாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த 30ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடர் குறித்து 31ம் தேதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை அமைப்பு இந்தியாவிடம் உள்ளதாகவும், கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை ஒன்றிய அரசு கடந்த 23ம் தேதியே வழங்கியதாவும் கூறினார்.
எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் படையின் 9பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டதாகவும், 24 மற்றும் 25 தேதிகளிலும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 20 செ.மீ. மேல் மழை பெய்யும். நிலச்சரிவு ஏற்படலாம், சேறும், சகதியுமாக மழைநீர் வரலாம், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் நிலைமை மோசமாக இருக்காது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
ஆனால், அவர் அளித்த தகவல்கள் தவறானவை என்று ஆங்கில நாளேடுகள் தரவுகளுடன் நிரூபித்துள்ளன. இதையடுத்து அமித்ஷா தவறான தகவல்களை தெரிவித்ததாக அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவர காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தங்கரிடம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
அதில் ஆங்கில நாளேட்டின் உண்மை கண்டறியும் செய்தியின் செய்தியை இணைத்துள்ள அவர், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தது தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் அவையை தவறாக வழிநடத்துவது விதிமீறல் மற்றும் அவையை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.