திருவனந்தபுரம்: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டின் சூரல்மலை கிராமத்தில் மீண்டும் பெய்யும் கனமழையால் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்து தற்காலிக இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வயநாட்டில் முண்டைக்கை, சூரல்மலை, வேப்படி ஆகிய மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட கிராமங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், நேற்று சூரல்மலையில் கனமழை பெய்தது.
இதனால் நிலச்சரிவின் போது மீட்பு பணிக்காக சூரல்மலை, முண்டைக்கை இடையே இருவழிஞ்சிப்புழா பகுதியில் ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பசு மாடு ஒன்றை தீயணைப்புத் துறையினர் போராடி பத்திரமாக மீட்டனர். முன்னதாக செம்பராமலை அடிவாரத்தில் வசித்து வந்த சுமார் 250 குடும்பங்களை பேரிடர் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். அந்த கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.