திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உருகுலைந்துள்ளன. இந்நிலையில் 100 பேருக்கு வீடுகளை கட்டிக்கொள்ள இடத்தை வழங்க முன்வந்துள்ள தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட இரு பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே உலுக்கியுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட மலை கிராமங்கள் மொத்தமாக மண்ணில் புதைந்தன.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவுகளை இழந்ததோடு, வாழ்நாள் முழுக்க உழைத்து கட்டிய வீடுகளை இழந்துள்ளனர். இனி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வரும் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை வயநாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இதற்கிடையே தனக்கு சொந்தமாக இருக்கும் 1000 ஏக்கர் நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 100 வீடுகளை கட்டி கொள்ள நிலம் வழங்குவதாக கூறியுள்ளார் தொழிலதிபர் பாபி செம்மனூர். காலம் முழுக்க உழைத்து வீட்டை கட்டியவர்கள் இந்த நிலச்சரிவில் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு என் நிலத்தில் இருந்து 100 வீடுகள் கட்டிக்கொள்ள நிலத்தையும் வழங்க இருக்கிறேன். இது தொடர்பாக அமைச்சர்களிடமும் பேசியுள்ளேன். வீட்டை தொலைத்து விட்டு எங்கு செல்வோம் என்று நினைப்பவர்களுக்கு உதவே இந்த முயற்சி.
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து சரியானவர்களுக்கு நிலம் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கும் உதவ இருக்கிறோம். மீட்பு பணிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பலருடைய பாராட்டை பெற்றுள்ளது. மேலும், இது குறித்து பேசியுள்ள பாபி செம்மனூர், வீடுகளை கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றவர் கூடுதலாக தேவைப்பட்டால் அதனையும் வழங்க தயார் என்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.