வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி பெய்த பெருமழை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியது. நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர்.
ஒட்டுமொத்த நாடும், கேரளாவில் நிகழ்ந்த துயரத்தால் கடும் துயரம் அடைந்தது. இந்நிலையில் வயநாடு முண்டக்கை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த போலீசார், மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அந்தப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.