சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளித்த அரசு, ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டபோதும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, “ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. இவ்வழக்கில் நீர்வளத் துறை செயலாளரையும், தாம்பரம் மாநகராட்சி ஆணையரையும், மின்சார வாரிய தலைவரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கியது எப்படி, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடுகிறோம், ” இவ்வாறு தெரிவித்து விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.