சோழிங்கநல்லூர்: தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், இந்திரா நகர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பேரரசு (11). இச்சிறுவன், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மசூதி தெரு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதை பார்த்த தண்ணீர் லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். தகவலறிந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மாணவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த மணி (37) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.