சென்னை: சென்னையில் பீக்ஹவரில் தண்ணீர் லாரிகளுக்கு தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த பெரம்பூரில் பள்ளி சென்ற 10 வயது சிறுமி கனரக லாரி ஏறி தாய் கண் முன்னே உயிரிழந்தார். இதனால் சென்னைக்குள் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
காலை 8 மணி முதல் மதியம் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஆணையர் அருண் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறி சென்னைக்குள் வந்த 200க்கும் அதிகமான கனரக லாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேரக் கட்டுப்பாடு காரணமாக சென்னையில் நேற்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 21) குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், சென்னையில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரிகள் இயங்க தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 7.30 மணிக்குள் தண்ணீர் சப்ளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாலைகள் குறித்த பட்டியலை 3 நாள்களுக்குள் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.