மேட்டூர்: கர்நாடக மாநிலம் கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், இன்று இரவு அல்லது நாளை காலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பருவமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கபினி அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் விநாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர், இன்று(20ம் தேதி) இரவு அல்லது நாளை காலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபினியிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், காவிரி கரையோரங்களில் முகாமிட்டுள்ள மீனவர்கள் தங்களின் முகாம்களை மேடான பகுதிக்கு மாற்றிக் கொண்டு சென்றனர். மீனவர்கள் இரவு நேரங்களில் மீன் பிடிக்க செல்லாமல், பாதுகாப்பாக முகாம்களில் தங்கி உள்ளனர். மேலும், காவிரி கரையோரங்களில் கட்டப்படும் பரிசல்களையும், பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்சென்று விட்டனர். ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து 6,500 கனஅடியாக நீடித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6040 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6,829 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 113.81அடியாகவும், நீர் இருப்பு 83.94 டிஎம்சியாகவும் உள்ளது.