சமீபத்தில் தர்பூசணியின் விலை வீழ்ந்து விவசாயிகளின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இப்படியொரு இக்கட்டான சூழலிலும் தங்களது திறமையான திட்டமிடலால், தாம் விளைவித்த தர்பூசணியை சாமர்த்தியமாக விற்பனை செய்து கணிசமான வருமானம் பார்த்திருக்கிறார்கள் அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தனும் அவரது தந்தை ஜெயபாலனும். அப்படி என்ன செய்தார்கள் என்கிறீர்களா? நாங்களும் அந்தக் கேள்வியோடு ஆனந்தனை சந்திக்கத் திட்டமிட்டோம். நாம் தொடர்புகொண்டபோது அவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் இருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து விருத்தாசலத்தின் சில கிராமங்களில் இருந்தார். ஒரு மினி டெம்போவில் தர்பூசணி பழங்களை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராக சென்று விற்பதுதான் இவரது வேலை. ரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி என பேனர் கட்டிக்கொண்டும், துண்டுப்பிரசுரம் விநியோகித்தபடியும் நடக்கிறது இவரது வியாபாரம். இதனால் ஆர்கானிக் விளைபொருட்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டவர்கள் இவரது விளைச்சலை விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். இப்படி அவர் பிசியாக வியாபாரத்தில் இருந்தபோதே நம்மிடமும் கொஞ்சம் பேசினார்.
“டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டு துபாய்ல வேலை பார்த்தேன். ஊரை விட்டுட்டு இங்க சம்பாதிச்சி என்ன பண்ணப்போறோம்? ஊருல போயி ஏதாவது பண்ணுவோம்னு தோணுச்சி. 2 வருசத்துல, அதாவது 2017ல ஊருக்கு வந்துட்டேன். எங்களுக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா அதுல அப்பா விவசாயம் எதுவும் பண்ணல. நாம பண்ணுவோம், அதுவும் இயற்கை விவசாயம் பண்ணுவோம்னு களத்துல இறங்குனேன். நெல், நிலக்கடலை, தர்பூசணின்னு பயிர் பண்றேன். லாபமோ நஷ்டமோ ரசாயனம் கலக்கக்கூடாதுன்னு உறுதியா இருந்து விவசாயம் பண்றேன். இப்போது ஒன்றரை ஏக்கர்ல நெல், ஒன்றரை ஏக்கர்ல தர்பூசணி, அரை ஏக்கர்ல செடி முருங்கை போட்டுருக்கேன்’’ என தனது பயோகிராபியை சுருக்கமாக பேசிய ஆனந்தனிடம் இயற்கை வழி தர்பூசணி எப்படி இருக்கு? என கேட்டோம்.“ தர்பூசணியை ஆர்கானிக் முறையில பண்ண முடியுமான்னு சந்தேகத்தோடதான் சாகுபடியை ஆரம்பிச்சேன். தை மாசம் நிலக்கடலை சாகுபடி செஞ்ச நிலத்துல 10 நாள் கழிச்சி ஏர் ஓட்டி தர்பூசணியை விதைக்க ஆரம்பிச்சோம். அந்த சமயத்துல மழை வரக்கூடாதுங்குறது முக்கியம். மழை பெஞ்சா தர்பூசணிக்கு ஆகாது. சரியான நேரம் பார்த்து விதைக்கணும். ஏர் ஓட்டுன பிறகு 8 இடைவெளி விட்டு பார் பிடிச்சி, அந்த பார்ல ஒரு அடிக்கு ஒன்னுன்னு விதையை ஊனுவோம். மழை ஈரத்துல கட்டை விரலால சின்னதா குழி பறிச்சி அதுல விதையைப் போட்டு மண்ணை மூடிடுவோம். அப்புறமா வெயில் அதிகமாக இருந்தால் 4வது நாள்ல பாசனம் செய்வோம். அதுக்கப்புறம் வாரம் ஒரு பாசனம் செய்வோம்.
10வது நாள்ல களையெடுத்து ஜீவாமிர்தத்தை பாசன தண்ணில கலந்து கொடுப்போம். அடுத்த வாரத்துல மீன் அமிலமும், அதுக்கடுத்த வாரத்துல பஞ்சகவ்யாவையும் ஸ்பிரே பண்ணுவோம். இந்த கரைசல்களை வாரம் வாரம் மாத்தி மாத்தி கொடுப்போம். 45வது நாள்ல பூ வைக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்துல தேமோர் கரைசலை செடிகள்ல தெளிப்போம். 50-55வது நாள்ல தர்பூசணி பிஞ்சுங்க அரை கிலோ அளவுல இருக்கும். அந்த சமயத்துல கடலைப் புண்ணாக்கை டிரம்மில் ஊற வச்சி தெளிப்போம். இதனால பழத்தோட சுவை அதிகரிக்கும். பூச்சிங்க வந்தா முக்கூட்டு எண்ணெயை (வேப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய், இலுப்பை எண்ணெய்) கோமியத்தில் கலந்து தெளிப்போம். வேப்பிலைக் கரைசலையும் ஏழிலைக் கரைசலையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளிக்கலாம்’’ என்று கூறியவாறே அடுத்த பாயின்டுக்கு விற்பனைக்காக மினி டெம்போவை இயக்கினார்.இதற்கிடையே ஆனந்தனின் தந்தையார் ஜெயபாலனை ஆண்டிமடம் அருகில் உள்ள திருக்களப்பூரில் சந்தித்தோம். தர்பூசணி வயலில் சில பராமரிப்பு பணிகளை செய்தவாறே, ஆனந்தன் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்.“70வது நாள்ல முதல் அறுவடை எடுக்கலாம். 75 நாள்ல இரண்டாவது அறுவடை, 80, 85 நாள்ல 3வது, 4வது அறுவடை எடுக்கலாம். ஆரம்பத்துல நல்ல விளைச்சல் இருக்கும். அதுக்கடுத்து குறையும். மொத்தமா 10 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். அதை என்னோட மகன் வடலூர், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகள்ல மக்கள்கிட்ட நேரடியா வித்துடுவாரு. ஒரு கிலோ 20 ரூவான்னு விக்கிறதால ஒரு லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இயற்கை முறையில செய்யுறதால பெரியளவுக்கு செலவு இருக்காது. அதிகபட்சமா 20 ஆயிரம் செலவு போனாலும் 80 ஆயிரம் லாபம் கிடைக்குது’’ என்கிறார்.
தொடர்புக்கு: ஆனந்தன் – 87600 05420.