பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதையடுத்து அருவியில் குளிப்பதற்கு 14 நாட்களுக்கு பின்பு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரத்திலும், முந்தைய வாரத்திலும் தொடர் மழை பெய்தது. இதையடுத்து அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 14 தினங்களுக்கு முன்பாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதன் பின்னர் தொடர்ச்சியாக இரவில் கனமழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த 14 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கும் குறைந்து நீர்வரத்து இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து இன்று சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், அருவியை சுற்றி பார்க்கவும் வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் இன்று அருவியில் குளிப்பதற்காக வந்திருந்த பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.